Header Ads



பிரதமரின் வங்கிக் கணக்கிலிருந்து 1977 இலும் பணம் திருட்டு - திருடியவர்கள் யார்..? வெளியாகியுள்ள புதிய தகவல்


உதித் லொக்குபண்டாரவுக்கு முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து மற்றுமொரு நபரும் பணத்தை சுருட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கில் இருந்து கோடிக்கணக்கில் பணத்தை பெற்ற அவருக்கு அருகிலேயே இருந்த நபர் தொடர்பான செய்தியின் சூடு இன்னும் தணியவில்லை.

மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளரான அவருக்கு அருகிலேயே எப்போதும் இருந்த உதித் லொக்கு பண்டாரவே பணத்தை எடுத்துள்ளார். வங்கி பணம் மீளபெற அட்டையை பயன்படுத்தி அவர் பல வருடங்களாக இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அட்டை மூலம் பணத்தை பெற்றுக்கொண்டது மாத்திரமல்லாது, பல்வேறு வகையாக செலுத்துதல்களுக்கும் அட்டையை பயன்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அழகு நிலையங்கள், ஆடம்பர ஆடை விற்பனை நிலையங்கள், நட்சத்திர ஹொட்டல்கள், முன்னணி உணவகங்கள் போன்றவற்றின் கட்டணங்களையும் வங்கி அட்டையின் மூலம் அவர் செலுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் உதித் லொக்குபண்டார குற்றத்தை ஒப்புக்கொண்டதாலும் பணத்தை திருப்பி தர இணங்கியதாலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் முடிவு செய்துள்ளனர்.

“அதனை விட்டு விடுங்கள். சீ.ஐ.டிக்கு செல்வதில் பயனில்லை” என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

இதனிடையே பிரதமருக்கு மிக நெருக்கமாக இருந்து அவரது பணத்தை கொள்ளையிட்ட உதித் லொக்குபண்டாரவின் சம்பவம் வெளியான போது, மகிந்த ராஜபக்ச தனக்கு நடந்த இதே போன்ற சம்பவம் ஒன்றை நினைவுப்படுத்தியுள்ளார்.

 “ 1977 ஆம் ஆண்டு காலத்தில் எனது சம்பளத்தை திருடிய சம்பவம் ஒன்று நடந்தது. அந்த காலத்தில் நான் நாடாளுமன்ற உறுப்பினர். எனது காரிலேயே வங்கியில் இருந்து சம்பளத்தை பெற்றுக்கொள்ளும் காசோலைகள் இருந்தன.

எனது காரில் விஜே மற்றும் வீலி கமகே ஆகியோரே அடிக்கடி பயணம் செய்வார்கள். இவர்களுடனேயே நான் கொழும்பில் இருந்து வீட்டுக்கு செல்வேன். விஜே எனது செயலாளர் போல் இருந்தார்.

நான் வெறும் கையுடன் தினமும் வீட்டுக்கு செல்வேன். ஒரு நாள் அம்மாவுடன் இணைந்து தங்கை என் மீது குறைப்பட்டுக்கொண்டார். அண்ணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் வெறும் கையுடன் வருகிறார்.

ஆனால், விஜே, நிமல் அண்ணனின் காரில் வீட்டுக்கு அருகில் இருக்கும் போது பொருட்கள் நிறைந்த பொதியை கையில் எடுத்துச் செல்கிறார்.” என தங்கை கூறியதாக மகிந்த குறிப்பிட்டுள்ளார்.

இவ்விதமாக காலம் செல்லும் போது மகிந்த ராஜபக்ச ஒரு நாள் தனது காருக்கு நான்கு புதிய டயர்களை பொருத்திக்கொண்டுள்ளார். அதற்கான பணத்தை காசோலையாக வர்த்தக நிலையத்திடம் வழங்கியுள்ளார்.

காசோலை வங்கியில் இருந்து திரும்பி விட்டதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கூறிய பின்னர் மகிந்த ராஜபக்ச அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக வங்கிக்கு சென்று அது குறித்து விசாரித்துள்ளார். சம்பவம் குறித்து மகிந்த மேலும் விபரிக்கையில்,

“ நான் முறைப்பாடு ஒன்றை செய்ய விஜேவுடன் குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்றேன். இடையில் விஜே என்னை கும்பிட்டு, ஐயோ மகிந்த நானே பணத்தை எடுத்தேன் எனக் கூறினார். நான் அவனை காரில் இருந்து இறக்கி, வீட்டுக்கு சென்றேன்.

நான் வெறும் கையுடன் செல்லும் போது அவன் எனது பணத்தில் பொருட்களை கொள்வனவு செய்துக்கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளான். இதனால், இதனையும் விட்டு விடுங்கள். சீ.ஐ.டிக்கு சென்று பயனில்லை” எனக் கூறியுள்ளார்.

கடந்த பல வருடங்களாக மகிந்த ராஜபக்சவுக்கு மிக நெருக்கமான நபராக உதித் லொக்குபண்டார காணப்பட்டார். குறிப்பாக மகிந்த எதிர்க்கட்சியில் இருந்த போதும் இதனை வெளிப்படையாக காண முடிந்தது. TW

1 comment:

  1. கள்வன் கள்வனை ஆளும் உலகில் ஈடுஇணையில்லாத ஒரு நாடு சிரிலங்கா.

    ReplyDelete

Powered by Blogger.