Header Ads



வழிகெட்ட அத்துவைத சிந்தனையில் சிக்கி ஈமானை இழக்க வேண்டாம், தௌபா செய்து மீளுங்கள் - ACJU


இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்

ACJU/NGS/2022/015 (21.01.2021)

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

எல்லாம் வல்ல அல்லாஹுதஆலா எம்மனைவரையும் 'எல்லாம் அவனே (ஹமவோஸ்த்)' எனும் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான அத்துவைத சிந்தனைகளிலிருந்து பாதுகாத்தருள்வானாக!

வரலாறு நெடுகிலும் உலகலாவிய முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பற்றி ஏற்றிருக்கும் கொள்கை கோட்பாடுகளுக்கு மாற்றமாகவும் முஸ்லிம்களின் உள்ளங்கள் புண்படும் வகையிலும், முஸ்லிம்களுக்கு மத்தியிலுள்ள அமைதியைச் சீர்குலைக்கும் விதமாகவும் வழிகெட்ட அத்துவைத சிந்தனைகள் எமது நாட்டில் கடந்த நான்கு தசாப்தங்களாக விரல் விட்டு எண்ணப்படக்கூடிய ஒரு சிலரால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றது. இப்பிரச்சினை ஆரம்பித்த போது, அக்காலத்தில் வாழ்ந்த மூத்த உலமாக்கள் அந்த வழி கேடுகளை பற்றிப் பேசியும் எச்சரித்தும் வந்தார்கள் என்பதும் யாவரும் அறிந்த உண்மையாகும்.

உலக முஸ்லிம்கள் அல்லாஹுதஆலாவை ஒருவனாகவும், வணக்கத்திற்குத் தகுதியான இரட்சகனாகவும், சகல படைப்பினங்களின் படைப்பாளனாகவும், அல்லாஹ் அனைத்து சிருஷ்டிகள் மற்றும் அனைத்து விடயங்களை விட்டும் வேறானவன் என்றும் நம்புகிறார்கள். இது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளில் ஒன்றாகும். இதற்கு மாற்றமாக சிலர், படைப்பினங்களும் இறைவனும் ஒன்றே தவிர வேறில்லை என்றும் உலகிலுள்ள அனைத்து பொருட்களும் அல்லாஹ்தான் என்றும் கூறி அல்லாஹுதஆலாவின் கண்ணியத்திற்கும் மகத்துவத்திற்கும் மாசு கற்பிக்கும் வகையில் செயற்பட்டு, அருவருக்கத்தக்க வஸ்துகளைக்கூட அல்லாஹ்வே எனக் கூறியும் வருகின்றனர்.

இக்கொள்கையை உடையோர் இச்சிந்தனை தூய சூபிச சிந்தனை என்றும் சூபி மகான்களால் பேசப்பட்ட கொள்கை என்றும் கூறி பாமர மக்களை வழிகெடுத்து வருகின்றனர். அத்துடன் அவர்கள் இச்சிந்தனைக்கு எதிராக பேசிய எங்கள் மூதாதையர்களான மூத்த உலமாக்களையும் தற்காலத்தில் இச்சிந்தனைக்கு எதிராக குரல் கொடுப்போர்களையும் மார்க்கத்தை விட்டும் வெளியேறியவர்கள் என்று பகிரங்கமாக பேசுவதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வேதனையுடன் அவதானித்து வருகிறது.

மேற்கூறிய வழிகெட்டச் சிந்தனைக்கும் தூய சூபிஸ சிந்தனைகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை உறுதியாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம். வரலாறு நெடுகிலும் இலங்கை வாழ் முஸ்லிம்களை வழிநடாத்தி வருகின்ற பல தரீக்காக்கள் எமது நாட்டில் இருக்கின்றன. அவற்றில் முன்னணித் தரீக்காக்கள் உட்பட அனைத்துத் தரீக்காக்களின் ஷைகுமார்களும், கலீஃபாக்களும் இச்சிந்தனை இஸ்லாத்துக்கு முற்றிலும் முரண்பட்டது என்பதைக் கூறியும்; இச்சிந்தனையை வன்மையாகக் கண்டித்தும் வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே, மேற்படி சிந்தனை தொடர்பில் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் அவதானமாக நடந்துகொள்ளுமாறும், வசீகரப் பேச்சுக்களால் கவரப்பட்டு மேற்படி வழிகெட்ட சிந்தனையில் சிக்கி, தங்களது ஈமானை இழக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். அத்துடன் மேற்படி இஸ்லாத்திற்கு முரணான இக்கொள்கையில் தெரியாமல் சிக்கிக் கொண்டவர்கள் தௌபா செய்து மீண்டு கொள்ளுமாறும்; அன்பாக வேண்டிக் கொள்கின்றோம்.

நம் நாட்டில் ஜனநாயக ரீதியில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தையும் மதச் சுதந்திரத்தையும் மதித்து நடந்து கொள்ளுமாறும், மதச் சிந்தனைகளையும் நம்பிக்கைகளையும் திரிபுபடுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்துவதை தவிர்ந்து கொள்ளுமாறும், முஸ்லிம்களுக்கு மத்தியில் பிளவுகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தும் இக்கொள்கைகளை விட்டு தங்களையும் தங்களைச் சர்ந்தவர்களையும் பாதுகாத்துக் கொள்ளுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம்களை வினயமாக வேண்டிக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

5 comments:

  1. தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் இருந்ததால் முயல்களுக்கெல்லாம் மூன்றுகால்கள்தான் என்று வாதிடுகின்றனர்
    முல்லாக்கள்!

    ReplyDelete
  2. பத்வா வழங்கிய முல்லாக்கள் தவறுசெய்துவிட்டு அதனை மூடிமறைக்க அல்லது அது சரியென்று நிறுவ நாயோட்டம் ஓடுகின்றார்கள்
    (ஷெய்ஹூனா மிஸ்பாஹி)

    ReplyDelete
  3. அறபு பத்வா 32 பக்கங்களில் ஓர் இடத்தில்கூட வஹ்ததுல்வுஜூத் என்ற சொல் இடம்பெறவே இல்லை
    ஏனெனில் உலமாக்களுக்கு விளப்பமில்லா குழப்பம்!

    ReplyDelete
  4. How will give Original wahabi give approval to visible for my comments

    ReplyDelete
  5. அல்லாஹ்வுடைய ஒளியை தங்கள் வாய்களால் ஊதியணைக்க முற்படுகின்றார்கள் ஆயினும் அவன் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான்!!!
    இறைவனின் சத்திய வாக்கு!!!

    ReplyDelete

Powered by Blogger.