ஜெய்லானி பிரதேசம் பெளத்த அடிப்படைவாதிகளினால், முஸ்லிம்களிடமிருந்து பலவந்தமாக கைப்பற்றல் - ரியாஸ் சாலி
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பல நூற்றாண்டு காலமாக அடிப்படைவாத குழுக்கள் கூரகல தொல்பொருள் பிரதேசத்தைப் பலவந்தமாக கைப்பற்றி புராதனதொல்பொருளை அழித்துள்ளன என்று சிங்கள தொலைக்காட்சி சேவையொன்றில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை தரீக்கா கவுன்ஸில் மற்றும் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக சபை என்பன முழுமையாக மறுத்துள்ளதுடன், வன்மையாகக் கண்டித்துள்ளன.
கூரகல பிரதேசம் பெளத்த அடிப்படைவாதிகளினாலே முஸ்லிம்களிடமிருந்து பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது. இது சூபிகள் வாழ்ந்த இடம். 800வருடங்களுக்கும் மேலான வரலாறு இதற்கு இருக்கிறது. இன்று தப்தர் ஜெய்லானி பள்ளிவாசல் ஒரு புறமாக ஒதுக்கி வைக்கப்பட்டு அப்பிரதேசத்தில் பாரிய அளவில் பெளத்ததாது கோபுரம் மண்டபங்கள் உட்பட நிர்மாணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பிரதேசம் தொல் பொருள் மையமாகும். இப்பிரதேசத்தில் எவராலும் எவ்வகையான நிர்மாணங்களையும் மேற்கொள்ள முடியாது என தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாகசபையின் தலைவரும், தரீக்கா கவுன்ஸிலின் நிர்வாக உறுப்பினருமான ரியாஸ் சாலி தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இன்று ஜெய்லானி பள்ளிவாசலுக்குச் செல்லும் முஸ்லிம்கள் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டு பாதுகாப்பு பிரிவினரால் சோதனையிடப்படுகிறார்கள். நெல்லிகல வத்துகும்புரே தம்மரதன தேரர் ஜெய்லானி பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பேசியிருக்கிறார். உலமா சபை ஜெய்லானி பள்ளிவாசல் எமக்குரியதல்ல என்று தெரிவித்திருக்கிறது. நெல்லிகல தேரர் சூபி முஸ்லிம்களுடனே இப்பள்ளிவாசல் பற்றி பேசவேண்டும்.
கொரோனா தொற்று பரவல் நிலவிய காலத்தில் கூரகல தொல்பொருள் மையத்தில் இந்நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள், சிவில்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த புண்ணிய ஸ்தல நிர்மாணம் சட்டவிரோதமானதாகும்.
சூபி முஸ்லிம்களை அடிப்படைவாதிகளென எவராலும் பெயர் சூட்டமுடியாது. உலமா சபையே வஹாபிஸ கொள்கைகளை கொண்டுள்ளது. தப்தர் ஜெய்லானி பள்ளி வாசலையோ, ஸியாரத்தையோ எவராலும் தடை செய்யவோ, மூடிவிடவோ முடியாது. கொள்ளுப்பிட்டி மஹல்லாவில் மூடப்பட்டிருக்கும் ஸியாரத்தையும் மீளத்திறக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.-Vidivelli
BETTER BBS TAKE THE DEWATAGAHA DARGA AND BUILT BUDDHIST HISTORIC TEMPLE. ITS IS BUDDHIST PLACE..
ReplyDelete