Header Ads



தனது வாழ்நாளில் நிகழ்ந்த 2 சம்பவங்களை பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி


இலங்கை விமானப்படையின் பயிற்சி நிறைவு அணிவகுப்பில் 
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் 
ஆற்றிய உரை 29.01.2022

இலங்கை விமானப்படை வரலாற்றில் இதுவரை நடக்காத மிகப் பெரிய விடைபெற்றுச் செல்லும் அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று காலை நியமிக்கப்பட்ட 153  மாணவப் படையினருக்கும் அதேபோன்று தமது “flying Brevets” பெற்றுக்கொண்ட ஆண் படையினர் 22 பேருக்கும் மற்றும் பெண் படையினர் 06 பேருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்களுக்குக் கீழ் பணியாற்றும் விமானப் பணியாளர்கள் மற்றும் விமானப் பெண்கள், அவர்களின் உயர் அதிகாரியாகிய நீங்கள், அவர்களின் சிறந்த நலன்களில் அக்கறை கொண்டிருப்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

அவர்களின் குடும்ப விபரங்கள், அவர்களின் திறமைகள் மற்றும் அபிலாஷைகள் உட்பட அவர்கள் பற்றி உங்களால் முடிந்த அனைத்து விபரங்களையும் அறிந்திருப்பது முக்கியம்.

அப்போதுதான் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் உங்களால் அவர்களுக்கு உதவ முடியும்.

உங்களால் வழிநடத்தப்படுபவர்கள் பற்றி இருக்கும் உண்மையான அக்கறை காரணமாக, எவ்வளவு பாரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று முன்னாள் இராணுவ அதிகாரியாக நான் நன்றாக அறிவேன்.

1980களின் இறுதிப் பகுதியில், நான் ஜெனரல் விஜய விமலரத்னவின் தலைமையில் கஜபா படைப்பிரிவின் இரண்டாம் கட்டளைத் தளபதியாக பலாலியில் இருந்தேன்.

இந்தக் காலப்பகுதியில், யாழ்ப்பாணத்தில் இருந்த எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ஐந்து நாட்கள் விமானம் மூலம் கொழும்பு வருவதற்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்து.

ஒரு நாள் பிற்பகல் ஜெனரல் விமலரத்ன என்னிடம் கொழும்பு சென்று வாருங்கள் என்று கூறினார். அச்சந்தர்ப்பத்தில் நான் கொழும்புக்குச் செல்வதற்கு திட்டமிட்டிருக்கவில்லை என்றேன். மறுநாள் உங்கள் மனைவியின் பிறந்தநாள் என்பதால் நீங்கள் செல்ல வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். 

அந்த அளவுக்கு அவர் தனது கனிஷ்ட அதிகாரிகளைப் பற்றி அறிந்திருந்ததோடு, அவர் எங்களை அவ்வளவு நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

இச்சம்பவம் நடந்து சுமார் 40 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இன்றும் கூட ஜெனரல் விமலரத்னவின் அந்தச்  செய்கையை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்.

நான் ஒருபோதும் மறக்க முடியாத மற்றொரு நிகழ்வு இருக்கின்றது. அது, ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவைப் பற்றியது.

1991ஆம் ஆண்டு ஆனையிறவு  இராணுவ முகாமை விடுவிப்பதற்கான நடவடிக்கையின் போது, ​​ஒரு இளம் மேஜர் கொப்பேகடுவவுக்கு அருகில் வந்தார். அவர் தனது மகன் ரோயல் கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்வதாகத் தெரிவித்து, பரிந்துரைக் கடிதம் ஒன்றைக் கோரினார்.

ஜெனரல் கொப்பேகடுவ உடனடியாக ஒரு பேனை மற்றும் கடதாசியொன்றைக் கொண்டுவரும்படி கூறினார். 

அதன்பிறகு, ரோயல் கல்லூரி அதிபருக்கு அவர் ஒரு கடிதம் எழுதினார், இந்த இளம் அதிகாரி யுத்த களத்தில் இருப்பதாகவும் தனது நாட்டுக்காக போராடுவதாகவும், மேலும் அவரின் மகனை கல்லூரியில் சேர்த்துக்கொள்வதில் காட்டும் அக்கறையை பாராட்டுவதாகவும் அக் கடிதத்தில் எழுதினார்.

அந்த நேர்காணலை எதிர்கொண்ட இச்சிறுவன், இன்று மிகவும் வெற்றிகரமான பொறியியலாளர் என்பதையும் ஜெனரல் கொப்பேகடுவ அவர்கள் வழங்கிய ஆதரவுக்கு அவரும் அவரது தந்தையும் என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.

உங்கள் தலைமையின் கீழ் உள்ள பணியாளர்களை நீங்கள் எந்தளவுக்கு கவனித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதைத்தான் இந்த இரண்டு சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன. 

உங்கள் கீழ் பணிபுரிபவர்களின் நல்வாழ்வு மற்றும் வெற்றிக்காக நீங்கள் உண்மையிலேயே முதலீடு செய்தால், அவர்கள் உங்களுக்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வார்கள்.

வெற்றிகரமான தலைமைத்துவத்தின் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் இப்பண்பை நீங்கள் அனைவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இறுதியாக, உங்கள் தொழில் வாழ்க்கையிலும் எதிர்காலத்தின் அனைத்துச் செயற்பாடுகளிலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். உங்களுக்கு நன்றி.

1 comment:

  1. பரீட்சைத் திணைக்களம் மூலமாக இவருடைய ஓலெவல் சான்றிதழைப் பரிசீலனை செய்யவேண்டும் என பொதுமக்கள் கேட்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.