அந்நிய செலாவணி நெருக்கடி 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் - மேலும் 2 பிரச்சினைகளும் பின்தொடரும்
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியானது எதிர்வரும் 2029 ஆம் ஆண்டு வரை நீடிக்கும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி மாறி 2025 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது மூன்று பிரதான நெருக்கடிகள் காணப்படுகின்றன.
அதில் ஒன்று அந்திய செலாவணி நெருக்கடி. இரண்டாவது அரச நிதி நெருக்கடி. மூன்றாது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து அதில் இருந்து மீள வேண்டிய நெருக்கடி. ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில் இந்த நெருக்கடிகள், அதற்காக தேசிய மற்றும் நாடாளுமன்றத்தின் பொறுப்புகள் பற்றி தெளிவுபடுத்தினார்.
இந்த அந்நிய செலாவணி பிரச்சினை என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சுதந்திரத்திற்கு பின்னர் யார் ஆட்சி செய்தாலும் இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்காக செலவாகும் நிதிக்கு ஈடாக வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டில் வர்த்தக தட்டுப்பாடு இருந்தது. நாம் அனைவரும் நாட்டில் உற்பத்தியை அதிகரிக்காது, அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்துள்ளோம்.
இதுதான் பிரச்சினையின் உண்மையான கதை. இதனால், எவரையும் விமர்சிக்காது பிரச்சினையின் உண்மையை புரிந்துகொள்ள வேண்டும். 2029 ஆம் ஆண்டு வரை இந்த நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்.
இதன் காரணமாகவே இதனை தேசிய நெருக்கடி எனக் கூறுகிறோம். இலங்கையின் வரலாற்றில் இறையாண்மை பிணை முறிகளை வெளியிட்டு, நல்லாட்சி அரசாங்கத்தை போன்று எந்த அரசாங்கமும் கடனை பெற்றதில்லை.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாத தருணத்தில் மில்லினியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் என்ற பெயரில் நாட்டின் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கு வழங்கி காட்டி கொடுக்கும் உடன்படிக்கையை செய்யத் தயாராகினர்.
பங்களாதேஷிடம் இருந்து 250 மில்லியன் டொலர்களை பெற்றதாக கூறுவோரே 480 மில்லியன் டொலர்களுக்காக நாட்டை காட்டிக்கொடுக்கும் எம்.சி.சி உடன்படிக்கையில் கையெழுத்திட முயற்சித்தனர். அந்தளவுக்கு நாடு வீழ்ச்சியடைந்திருந்தது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment