Header Ads



உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம், பண்டமாற்று முறையைப் பயன்படுத்த நேரிடும் - விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித்


நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டில் உள்ள மக்களின் நுகர்வுக்காக உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்திருப்பது அத்தியாவசியமானது என்றும், ஏதேனும் ஒரு விதத்தில் உணவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், பண்டமாற்று முறையைப் பயன்படுத்த நேரிடும் என அவர் கூறினார்.

உணவுப் பரிமாற்று முறை என்பது நாட்டில் அதிகளவில் கையிருப்பில் உள்ள உணவுப் பொருளை நட்பு நாட்டுக்கு கொடுத்து அதற்கு ஈடாக உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வது ஆகும்.

உதாரணமாக, இந்த செயல் கடன் கொடுக்கும்போது பணம் கொடுப்பது போன்றது எனவும், இவ்வாறானதொரு நெருக்கடி ஏற்படும் சந்தர்ப்பத்தில் முதலில் செய்ய வேண்டியது அதற்கான தீர்வை காண்பதுதான் எனவும் அவர் தெரிவித்தார்.

ஏதேனும் ஒரு விதத்தில் உணவு தட்டுப்பாட்டுக்கு முகங்கொடுக்க நேரிட்டால், முதலில் கர்ப்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், நோயாளிகள் போன்றவர்களுக்காக கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் ஒதுக்கப்பட வேண்டும் எனவும், இளைஞர்கள் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை துரிதமாக பயன்படுத்தி, சிறிதளவிலேனும் தியாகம் செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அத்தியாவசியமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தி, எதிர்காலத்தில் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டும் கவனம் செலுத்தினால், அது எதிர்கால வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன், நாட்டில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் எண்ணம் அதிகாரிகளுக்கு இல்லை என விவசாய அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. எல்லா வற்றையும் விட வனவாசம் சிறந்த தீர்வாக அமையும்.

    ReplyDelete

Powered by Blogger.