பொது வேட்பாளராக போட்டியிடும் கனவில் பலர் (விபரம் உள்ளே)
இவர்களில் முதலில் இருப்பவர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட இரண்டு பிரதான வேட்பாளர்களில் சஜித் பிரேமதாசவும் ஒருவர்.
எவ்வாறாயினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள இரண்டு முக்கியஸ்தர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான திட்டங்களை வகுத்து வருகின்றனர். இவர்களில் ஒருவர் ஒரு முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.
இரண்டாம் நபர் 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து அமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். ஒரே கட்சிக்குள் இருக்கும் இந்த இருவருக்கும் இடையில் தற்போது பனிப் போர் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிறிய கட்சி ஒன்றின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் கனவில் இருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சராக அர்ஜூன ரணதுங்கவின் எதிர்கால அரசியல் குறித்து இலங்கையின் அரசியல் துறையில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இப்படியான பின்னணியில் ஊடக சந்திப்பொன்றில் ரணதுங்க வெளியிட்ட கருத்து சர்ச்சைக்குரியதாக அமைந்தது. தனக்கு அழைப்பு கிடைத்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவேன் என அவர் கூறியிருந்தார்.
இதனடிப்படையில் அர்ஜூன ரணதுங்கவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருக்கின்றார் என்பது தெளிவான விடயம்.
அதேவேளை அரசியல் களத்தில் மேலும் இரண்டு பேர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் உதவியுடன் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்கனவே மோதல் ஆரம்பமாகி விட்டதாக உட்தரப்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய சிரேஷ்ட உறுப்பினர் என தெரியவந்துள்ளது. தனக்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவு கிடைக்கும் என அவர் கூறி வருகிறார்.
இதனிடையே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள ஒருவரும் ஜனாதிபதித் தேர்தல் கனவில் இருந்து வருகிறார். அவர் தற்போது அரசாங்கத்துடன் கொள்கை மோதலில் ஈடுபட்டுள்ளார்.
அரசாங்கத்தில் இருந்து விலகி, தனியான அரசியல் பயணத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்.
இவர்களை தவிர மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை கட்சி அரசியலில் நேரடியாக சம்பந்தப்படாத நபர் ஒருவரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என பேசப்பட்டு வருகிறது. அந்த நபர், இலங்கையின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்ப்பார்ப்பில் இருந்து வருவதாக பேசப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடும் எதிர்பார்ப்பை தம்மிக்க பெரேரா கொண்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் தம்மிக்க பெரேராவை பொது வேட்பாளராக நிறுத்துவதாக கூறியிருந்தார் என அப்போது செய்திகள் வெளியாகி இருந்தன. TW
Post a Comment