Header Ads



ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் குறித்து கஜேந்திரகுமார் மனவேதனை


ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்குள்ளே தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது என்ற நிலைப்பாட்டில் தாங்கள் மிகத் தெளிவாக உள்ளமையால், தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மேலும் சில கட்சிகளின் தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை. இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்தியாவிற்கு உறுதியளித்ததை போன்று 13 ஆம் திருத்தத்தினை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிணைந்து கோருவதற்கு கட்சித் தலைவர்களிடையே இணக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தார். 

இதேவேளை, எதிர்வரும் 21 ஆம் திகதி சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் மீண்டும்கூடி பொது ஆவணம் ஒன்றில் கைச்சாத்திடவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

இவ்வாறான பின்னணியில், குறித்த சந்திப்பில் பங்கேற்காதமைக்கான காரணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வெளியிட்டார். 

இதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இந்த முயற்சியில் ஈடுபடுவது தங்களுக்கு மிக மனவேதனையாக உள்ளது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. இவர் களுக்கு முஸ்லிம்கள் கறிவேப்பிலை அல்லது ஆறு கடக்கும் வரை அண்ணன்-தம்பி.

    ReplyDelete

Powered by Blogger.