65 வயதிலும் தங்கம் வென்று அசத்திய லாபீர் - அல்லாஹ்வின் உதவியுடன் சர்வதேசத்திலும் சாதனை படைப்பேன் என உற்சாகத்துடன் கூறுகிறார்
மட்டக்களப்பு, ஏறாவூரில் 1956 ஆம் ஆண்டு பிறந்த இவர், தற்போது நான்கு பிள்ளைகள், எட்டுப் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
சிறுவயதில் இருந்து விளையாட்டுத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட முகம்மட் லாபீர், பாடசாலைக் காலங்களில் மாவட்ட, மாகாண போட்டிகளில் பங்குபற்றி பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
சிறுவயதில் சாதனைகளை நிலைநாட்டியது போன்று தனது அறுபத்தைந்து வயதிலும் அதே உத்வேகத்துடன் சாதனை படைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இலங்கை மெய்வல்லுனர் அமைப்பு கொழும்பு சுகததாச அரங்கில் இம்மாதம் 11 ஆம், 12 ஆம் திகதிகளில் நடாத்திய மெய்வல்லுநர் போட்டியில் கலந்து கொண்டே இவர் புதிய சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
11 ஆம் திகதி நடந்த 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் 15.6 செக்கன்களில் ஓடி இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும், 12 ஆம் திகதி நடந்த 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் 34 செக்கன்களில் ஓடி முதலாம் இடம்பெற்று தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு அசத்தல் சாதனை படைத்த மூத்த ஓட்ட வீரர் முகம்மட் லாபிரை “விடிவெள்ளி” க்காக ஏறாவூரிலுள்ள அவரது இல்லம் சென்று சந்தித்துப் பேசினோம்.
“தன்னம்பிக்கை இருந்தால் ஒவ்வொருவராலும் சாதிக்க முடியும். என்னால் முடியும் என்ற எண்ணத்தை நாம் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்ததன் காரணத்தால்தான் நான் இன்று இவ்வாறான சாதனைகளை படைத்துள்ளேன்.
நான் ஏறாவூர் அலிகார் பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் விளையாட்டுத்துறையில் ஏராளமான பெருமைகளை தேடிக் கொடுத்துள்ளேன்.
1971 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கிளித்தட்டு விளையாட்டில் கலந்து கொண்டு மாகாண சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டேன்.
அத்தோடு, நான் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சீ. கழகத்தின் உதைப்பந்தாட்ட அணியில் கோல் காப்பாளராகவும் இருந்துள்ளேன். அந்தக் கழகத்தின் ஆயுட்கால முகாமையாளராகவும் நான் இன்றுவரை செயற்பட்டு வருகிறேன்.
விளையாட்டில் ஆர்வம் கொண்ட என்னை மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியின் ஸ்தாபகர் வெபர் பாதிரியார் மேலும் ஊக்கமளித்தார். உன்னால் ஓட்டப் போட்டியில் சிறப்பாக பங்குபற்ற முடியும். அதில் தொடர்ந்தும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று எனக்கு அப்போது ஆலோசனைகளை வழங்கினார். அவர்தான் எனது பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வந்தார்” என்று முகம்மட் லாபிர் தனது சிறுவயது கால அனுபவங்களை எம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
“பதின்மூன்று வயதில் 100 மீற்றர், நீளம் பாய்தல், அஞ்சல் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்ட சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டேன்.
அதேபோன்று அகில இலங்கை ரீதியாக பதுளையில் நடந்த போட்டியிலும் கலந்து கொண்டு அப்போது நான் வெண்கலப்பதக்கம் ஒன்றினையும் பெற்று சாதனை நிலை நாட்டினேன்.
1983 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் நடந்த ஏ.ஜி.ஏ.மீட்டில் 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி 4 நிமிடம் 29.5 செக்கன்களில் ஓடி முடித்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளேன். அந்த சாதனை இதுவரை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
நான் அப்போது கடற்கரை மணலில் ஓட்டப் பயிற்சி மற்றும் நடைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தேன்.
நான் 1985 ஆம் ஆண்டு திருமணம் முடித்தேன். அதன் பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த போதும் கழக நிர்வாகத்தில் இருந்து வந்தேன்.
விளையாட்டில் ஈடுபாடு இல்லாத அந்த காலப்பகுதியில் நான் ஆன்மிகம், தொழில், பிள்ளைகளின் கல்வி விடயங்களில் மிகவும் அக்கறை கொண்டு செயற்பட்டு வந்தேன். அதனால் என்னால் தொடர்ந்தும் விளையாட்டில் ஈடுபாடு காட்ட முடியவில்லை.
இந்த நிலையில் தான் அண்மையில் கொழும்பு சுகததாச மைதானத்தில் மாஸ்டர்ஸ் அத்லெட்டிக் சம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளதாக நான் அறிந்து கொண்டு அதற்காக விண்ணப்பித்தேன்.
அதில் கலந்து கொள்வதற்காக வேண்டி நான் 36 வருடங்கள் தொடர்பு இல்லாமல் இருந்த எனது ஓட்டப் பயிற்சியை மீண்டும் தைரியத்தோடு முன்னெடுத்தேன்.
இந்தப் போட்டியில் நான் சாதனை படைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் வாரத்தில் ஆறு நாட்கள் பயிற்சிகளில் ஈடுபட்டேன்.
நீண்ட வருடங்கள் ஓட்டப் பயிற்சியில் தொடர்பு இல்லாமல் இருந்து திடீரென்று பயிற்சியில் ஈடுபட்ட போது நான் உபாதைக்கு ஆளாகினேன்.
எனினும் எதையும் நான் பொருட்படுத்தவில்லை. எனது தொடர் பயிற்சிதான் நான் இந்த சாதனையை நிலைநாட்ட காரணமாக அமைந்துள்ளது.
நான் தினந்தோறும் சுமார் பன்னிரண்டு கிலோ மீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டி ஓடி வருகிறேன்.
அல்லாஹ்வின் உதவியால் எனக்கு எந்த நோயும் இல்லை. நான் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுதான் என்னை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது.
போட்டியில் நான் நல்ல முறையில் பங்குபற்ற வேண்டும் என்பதற்காக உணவுப் பழக்கவழக்கத்தில் நான் கூடுதல் கவனம் செலுத்தி வந்தேன்.
அதற்காக நான் ஒவ்வொரு நாளும் பாலும், முட்டையும் சாப்பிட்டு வந்தேன்.
நான் இதற்கு முன்னரும் கொழும்பு சுகததாச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டுள்ளேன். 1978 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் நான்காம் இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.
அதில், இறுதி சுற்றை வேகமாக ஓடி முடித்தமைக்காக எனக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. அவ்வாறு ஓடியதை பாராட்டி என்னைப்பற்றி டெய்லி நியூஸ் பத்திரிகையில் செய்தி ஒன்றும் பிரசுரமாகியிருந்தது.
நான் இவ்வாறு சாதனைகள் படைப்பதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய நபர்களை என்னால் மறக்க முடியாது. எனது பிள்ளைகள், எனது குடும்பம், நண்பர்கள், கழக உறுப்பினர்கள் எல்லோரும் என்னை உற்சாகப்படுத்தினார்கள். குறிப்பாக நான் இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக வேண்டி எனக்கு விண்ணப்பப்படிவங்களை பெற்றுத்தந்து வழிகாட்டிய கழக உறுப்பினர் தஸ்லீம் என்பவருக்கு நான் விசேடமாக நன்றிகளை தெரிவிக்கிறேன்.
அதேபோன்று நான் சாதனை நிலைநாட்டியமைக்காக அரசியல் தலைவர்கள், கல்விமான்கள், அதிகாரிகள், முக்கியஸ்தர்கள் எனப்பலரும் நேரடியாகவும் தொலைபேசி மூலமாகவும் எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனது வீட்டுக்கு தினந்தோறும் பலரும் வருகை தந்து என்னை வாழ்த்திச் செல்கின்றனர். எனக்கு வாழ்த்துச் சொல்வதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்தும் தொலைபேசி அழைப்புக்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
இதே போன்றதொரு போட்டி அடுத்த வருடம் மார்ச் மாதம் சுகததாச அரங்கில் இடம்பெறவுள்ளது அதில் 100, 200, 400 மீற்றர் ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது. அதில் நானும் கலந்து கொள்ளவுள்ளேன். அதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் இந்தோனேசியாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான பயிற்சிகளை நான் மேற்கொள்ளவுள்ளேன்.
தேசியத்தில் சாதனை படைத்தது போன்று அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு சர்வதேசத்திலும் சாதனை படைப்பேன்” என்று உற்சாகத்துடன் கூறினார் சாதனை வீரர் முகம்மட் லாபிர்.- Vidivelli, எச்.எம்.எம்.பர்ஸான்
இறுதிவரை இதே ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென அல்லாஹ்விடம் வேண்டுகிறேன். 🤲🤲.
ReplyDelete