3 அமைச்சர்களுக்கு எதிராக, சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் போர்க்கொடி - அரசாங்கத்திற்குள் பிளவு பகிங்கமாகியது
யுகதனவி மின்னுற்பத்தி நிலையம் தொடர்பில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தாக்கல் செய்துள்ள சத்தியக்கடதாசிகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.
கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்காவின் New Fortress நிறுவனத்திற்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் சட்ட மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அளுவிகாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, எல்.ரீ.பி.தெஹிதெனிய ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசிகளை தாக்கல் செய்த அமைச்சர்கள் அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பை மீறியுள்ளதாக சட்டமா அதிபர் மன்றில் மேலும் தெரிவித்தார்.
சட்டவிரோதமான ஆவணங்களை சமர்ப்பித்து நீதிமன்றத்திடம் அரசியலமைப்பு ரீதியிலான உத்தரவைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்துள்ளமை பாரதூரமானதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமிடம் சட்டமா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், அமைச்சர்களின் குறித்த ஆவணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.
அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நானாயக்கார ஆகியோர் கடந்த 7 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களுக்கு ஆதரவாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்த குறித்த அமைச்சர்கள், அரசியல் கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் மற்றும் இணக்கப்பாட்டினாலேயே அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகவில்லையென அவர்கள் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா தெரிவித்தார்.
அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் ஆட்சேபனை அல்லது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அமைச்சர்களுக்கு போதியளவு கால அவகாசம் வழங்கி அந்த பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி கூறினார்.
குறித்த அமைச்சரவைப் பத்திரம் கிடைத்ததாக அமைச்சரவையின் செயலாளர் தெரிவித்தாலும் விமல் வீரவன்சவிற்கு அமைச்சரவைப் பத்திரம் கிடைக்கவில்லையென ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.
மனு தாக்கல் செய்வதற்கு முன்னரே அமைச்சர்கள் மூவரும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக அவர் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த மனுக்கள் எதிர்வரும் ஜனவரி 10, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
Post a Comment