Header Ads



இலங்கைக்கு உரித்தான 'மெனிகே' 19,360 கிலோமீற்றர் பறந்து சென்று, மீண்டும் நாடு திரும்பியது


புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம்  பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஐரோப்பா, ஆர்க்டிக் வரையில் வடக்கு நோக்கி புலம்பெயர்ந்த குறித்த பறவை சுமார் 20,000 கிலோமீற்றர் தூரம் பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளது. 

'மெனிகே' என்று பெயரிடப்பட்டுள்ள Heuglin's gull என்ற இந்த பறவை, கடந்த ஏப்ரல் மாதம் தலைமன்னாரிலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்திருந்தது.

தலைமன்னாரிலிருந்து ஜீ.பி.எஸ் பொருத்தப்பட்ட 'மேக' மற்றும் 'மெனிக்கே' என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு Heuglin's gull இன பறவைகள் விடுவிக்கப்பட்டன.

அவற்றின் மேக உடனேயே வடக்கு நோக்கி இடம்பெயர்வைத் தொடங்கியது, மெனிகே 20 நாட்களுக்கு மன்னாரில் தங்கியிருந்து ஏப்ரல் பிற்பகுதியில் மன்னாரை விட்டு வெளியேறியது.

இலங்கையை விட்டு வெளியேறி ஆறு மாதங்கள், ஒன்பது நாட்களுக்குப் பிறகு கடந்த நவம்பர் 4 ஆம் திகதி மெனிகே மன்னாருக்குத் திரும்பியது. 

மெனிக்கே மன்னாரிலிருந்து ஆர்க்டிக் வரை சென்று மீண்டும் மன்னார் வரையான தனது முழுப் பயணத்தின் போது 19,360 கிலோமீற்றர் தூரத்தை வியக்கத் தக்க வகையில் கடந்துள்ளது.

தெற்கு திசை நோக்கி இடம்பெயரும் 'மேக' இறுதி கட்டத்தில் இருக்கிறது, அது விரைவில் நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Heuglin's gull என்பது இலங்கையின் வடமேற்கு மற்றும் வடக்கு கரையோரப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு அழகான,  புலம்பெயர் பறவையாகும். 

இந்த ஆய்வை மேற்கொள்ளும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் களப் பறவையியல் ஆய்வு வட்டத்தின் ஆய்வுக் குழுவில் பேராசிரியர் சம்பத் செனவிரத்ன (முதன்மை ஆய்வாளர்), பேராசிரியர் சரத் கொடகம மற்றும் கலாநிதி கயோமினி பனாகொட ஆகியோர் அடங்குகின்றனர். 

வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இந்த ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.

No comments

Powered by Blogger.