நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தற்போது எமது கிடங்குகளில் உள்ளது, பீதி வேண்டாம் - பெற்றோலிய சேமிப்பு தலைவர் உவைஸ்
நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து
தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
தற்போது எரிபொருள் விநியோகம் துரிதமாக நடைபெற்று வருவதாகவும்,
களஞ்சியசாலைகளிலும் போதுமான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை, எனவே அவசரப்பட்டு எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் நிரப்ப வேண்டாம் என்றும் நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தற்போது எமது கிடங்குகளில் உள்ளது என்பதை நான் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன் என்றார்.
தான் பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் 40,000 மெற்றிக் தொன் டீசல் முத்துராஜவெலயில்
இறக்கப்படுகிறது என்ற அவர், நாளை (இன்று) 36,000 மெற்றிக் தொன் பெற்றோலை இறக்குமதி செய்யவுள்ளோம் என்றும் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் 40,000 மெற்றிக் தொன் டீசல் இறக்குமதி செய்யப்படவுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் நிலையங்கள், வழக்கமாக ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு தேவையான
எரிபொருட்களையே வாங்குகின்றன என்றும் அவை அனைத்தும் முடிந்தவுடனேயே அவர்கள் மீண்டும் எரிபொருளை பெற்றுக் கொள்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டிய அவர், இதன் காரணத்தாலேயே எரிபொருளுக்கு சிறிது தட்டுப்பாடு காணப்படுகிறது என்றார்.
இதனால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் வரிசையில் நிற்கின்றனர் என்ற அவர், பதிவு செய்தவற்றையும் கையிருப்பில் உள்ள எரிபொருளையும் சேர்த்தால் சுமார் ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருள் கையிருப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
சபுகஸ்கந்தயிருந்து 5 முதல் 10 சதவீதம் வரை விநியோகித்ததாகவும் சபுகஸ்கந்த
மூடப்படுவதால், இந்த விநியோகங்கள் அனைத்தும் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல
முனையங்களுக்கு விநியோகத்திற்காக கொண்டு வரப்படும் என்று மேலும் தெரிவித்தார்.
Post a Comment