டிங்கர் லசந்த கொல்லப்படலாம் என முன்கூட்டியே தகவல் கிடைத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு
ஆயுதங்களை காண்பிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டு இன்று (26) அதிகாலை உயிரிழந்த டிங்கர் லசந்த, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உயிரிழக்கலாம் என நேற்றிரவே தகவல் கிடைத்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட டிங்கர் லசந்த எனப்படும் H.L.M. லசந்த எனும் தமது சேவை பெறுநர் ஆயுதங்களை காண்பிப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டபோது இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு என்ற போர்வையில் கொலை செய்யப்படுவதற்கான திட்டம் உள்ளதாக அவரது சட்டத்தரணி சஞ்சய ஆரியதாச இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக செயற்பட்ட இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், பொலிஸ்மா அதிபருக்கு மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் அறிவித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முறைப்பாடு மற்றும் விசாரணைக்கு பொறுப்பான ஆணையாளருக்கும் ஆணைக்குழுவின் முறைப்பாடு மற்றும் விசாரணைப் பிரிவின் பணிப்பாளருக்கும் மனிதாபிமான முகவர் நிறுவனக் குழுமத்தின் தலைவருக்கும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பின்புலத்திலேயே டிங்கர் லசந்த கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற இவ்வாறான கொலைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை விசாரணைகளோ அல்லது குற்றவாளிகள் அடையாளப்படுத்தப்படவோ இல்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சந்தேகநபர்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தவறியமை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தௌிவுபடுத்த வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் மனித உரிமை நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், இந்தக் கொலை இடம்பெற்றுள்ளமையினால், அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment