Header Ads



இனவாதிகளால் தடுக்கப்பட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட, சாய்ந்தமருத்துக்கான தனியான பிரதேசசபை மீண்டும் வழங்க வேண்டும்


இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக நாட்டுக்கு வழங்கப்பட்ட மாகாணசபைகள், நாட்டுக்கு பெரும் சுமையாக இருப்பதாக தெரிவித்த அரசாங்க ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாஉல்லா, புதிய அரசமைப்பின் ஊடாக மாகாணசபைகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.   

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்,   

கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் யாரையும் குறை சொல்ல வேண்டும் என்கிற நோக்கம் எமக்கு இல்லை. ஆனால், மாகாணசபைகளுக்கு கீழ் இருக்கின்ற கிண்ணியா நகரசபை, பிரதேசசபையால் இந்த படகு சேவையை பாதுகாப்பாக முன்னெடுக்க முடியாதததையிட்டு, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கவலையடைகிறேன் என்றார்.   

வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு, பின்னர் இனவாதிகளால் தடுக்கப்பட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள சாய்ந்தமருத்துக்கான தனியான பிரதேசசபை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் இதன்போது தெரிவித்தார்.   

மாகாணசபை என்பது நாட்டுக்கு தேவையில்லாது சுமை. இதற்கு மக்களின் பணம் வீணாக செலவிடப்படுகிறது. பிரித்தானியர் காலத்தில் இருந்து நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கு  அரசியலமைப்பு ஊடாக உரிமைகள் பகிரப்பட்டுள்ளன என குறிப்பிட்டார்.  

தமிழர்களுக்கு தேவையானதை வழங்க முடியுமாக இருந்தால், முஸ்லிம்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட நாட்டில் பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியுமாக இருந்தால் எதற்காக நாட்டில் மாகாணசபைகள்? எனவும் கேள்வி எழுப்பினார்.   

ஒரே நாடு, ஒரே சட்டம் என்கிறார்கள். ஆனால், மாகாண சபைகளில் 10 சட்டங்கள் இருக்கின்றன. மாகாண சபைகளை இல்லாதொழித்து நாட்டுக்கு தேவையான சிறந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் எனவும் அரசாங்கத்திடம் கேட்டுகொண்டார்.

பா.நிரோஸ்  


1 comment:

Powered by Blogger.