Header Ads



பல்கலைக்கழக மாணவர்களின் கல்வியை தாமதிக்கக் கூடாது – பிரதமர் மஹிந்த உத்தரவு


ல்கலைக்கழக மாணவர்களின் கல்வி தாமதப்படுத்தப்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (24) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து வலியுறுத்தினார்.

மருத்துவ பட்டப் படிப்பினை 22 வயதில் நிறைவுசெய்வது மற்றும் ஏனைய அடிப்படை பட்டப் படிப்புகளை 20 வயதில் பூர்த்தி செய்வது தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் இன்று இடம்பெற்ற சந்திப்பின்போது முன்வைத்த முன்மொழிவு தொடர்பில் கவனம் செலுத்தி கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சு மற்றும் உயர் கல்வி அமைச்சு ஆகியன ஏற்கனவே இது தொடர்பில் கவனம் செலுத்தி திட்டமிட்டபடி பரீட்சைகளை நடத்தி, காலதாமதமின்றி பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டு வருவதாக இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுனர்களிடமிருந்து வருமான வரி அறவிடுவதில் நல்லாட்சி அரசாங்கக் காலப்பகுதியில் காணப்பட்ட கொள்கைக்கு மாறாக மஹிந்த ராஜபக்ஷ யுகத்தின் வரி கொள்கையை அமுல்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் சார்பில் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய இச்சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார்.

12 சதவீதமாகக் காணப்பட்ட வருமான வரி நல்லாட்சி அரசாங்கத்தினால் 24 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தொழில் வல்லுனர்கள், வர்த்தகர்களாக கருதப்பட்டு அம்மட்டத்தில் வரி அறவிடப்படுவதாகவும் வைத்தியர் அனுருத்தத பாதெனிய சுட்டிக்காட்டினார்.

குறித்த பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் நடவடிக்கை முன்னெடுப்பதற்கு அதனுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடலொன்றை தயார்ப்படுத்துமாறு கௌரவ பிரதமர் இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அரச சேவையாளர்களின் சம்பளம் தொடர்பில் காணப்படும் பிரச்சினையை தீர்ப்பதில் அது குறித்து நிதி அமைச்சு, அரசாங்க நிர்வாக அமைச்சுடன் இணைந்து தேசிய சம்பளக் கொள்கையின் அடிப்படையில் சம்பள ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கமைய சம்பளம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்குமாறு அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் வைத்தியர்கள் இதன்போது கௌரவ பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

குறித்த சந்திப்பில் கௌரவ சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கௌரவ இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பிரதமரின் சிரேஷ்ட உதவி செயலாளர் பிரியங்க நாணயக்கார, தேசிய சம்பள ஆணைக்குழுவின் செயலாளர் சந்திரானி சேனாரத்ன, அரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பணிப்பாளர் தரங்கா ஹேரத், தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷான், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட நிபுணர் வைத்தியர் அனுருத்த பாதெனிய மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பிரதமர் ஊடக பிரிவு

No comments

Powered by Blogger.