இன்று புனித மக்கா முற்றுகையிடப்பட்ட தினமாகும்...!
1979 நவம்பர் 20 அன்று உலக இஸ்லாமியர்களை அதிர்ச்சியடைய செய்த தினமாகும். அதாவது உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களினதும் புனித தளமான மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகையிடப்பட்டது.
இந்த முற்றுகையை தலைமைதாங்கி வழிநடாத்தியவன் சவூதி அரேபியாவின் செல்வாக்குள்ள குடும்பம் ஒன்றில் பிறந்து இஸ்லாத்தை நன்றாக கற்றறிந்த உலமாக்களில் ஒருவனான ஜுஹைமான் என்பவனாகும். இவன் தான் கண்ட கனவுக்கு அமைவாக தனது மைத்துனனான முஹம்மது அப்துல்லாஹ்வை “இமாம் மஹ்தி” என்றும் அவருக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்றும் அறிவித்தான்.
அத்துடன் சவூதி அரேபியா இஸ்லாத்தைவிட்டு தூரமாகிச்செல்வதோடு மேலைத்தேய கலாச்சாரம் சவுதியில் பரப்பப்படுவதாக சவூதி மன்னர் குடும்பத்தினர்மீதும் குற்றம்சாட்டினார். இவரது இந்த கருத்துக்களை நம்பியவர்களில் சில உலமாக்களும் அடங்குவர். அத்துடன் குவைத், எகிப்து, யேமன் மற்றும் ஆபிரிக்க கறுப்பின முஸ்லிம்களும் ஜுஹைமானின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் 1979 நவம்பர் 20 அன்றைய தினம் ஹிஜ்ரி 1400 ஆவது ஆண்டின் முதல் நாள் என்பதனால் 50,000 பேர்களுக்கும் அதிகமானவர்கள் மஸ்ஜிதுல் ஹரத்தில் பஜ்ர் தொழுகையில் கலந்துகொண்டிருந்தனர். அப்போது தொளுகையாளிகளோடு கலந்திருந்த 500 க்கும் மேற்பட்ட குழப்பக்காரர்கள் அவர்களின் அங்கிகளுக்கிடையே ஒழித்து வைத்திருந்த ஆயுதங்களுடன் மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் நுழைந்து அதன் நுழைவாயில்கள் அனைத்தையும் சங்கிலிகளினால் பூட்டினார்கள்.
மஸ்ஜிதுல் ஹரத்தை கைப்பற்றிய குழுவினர், தொழுகைக்காக வந்தவர்கள் பலரை விடுவித்தாலும், சிலரை தொடர்ந்து பணயக் கைதியாக தடுத்து வைத்துக்கொண்டனர்.
புனித மஸ்ஜிதின் மினராக்கள் “ஸ்நைப்பர்” தாக்குதலுக்கான அரணாக அமைத்துக்கொண்டனர். கலகக்காரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை துல்லியமாக அறிந்திராத சவூதி அரேபிய பாதுகாப்புப் படையினர், ஒரு சில மணி நேரங்களுக்குள் மஸ்ஜிதை மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் களம் இறங்கினர்.
மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் யுத்தம் செய்வதை இஸ்லாம் தடுத்துள்ள காரணத்தினால், பாதுகாப்புப் படையினர் மஸ்ஜிதுக்குள் நுழைந்து எதிரிகள்மீது தாக்குதல் நடாத்துவதற்கு உலமாக்கள் பத்துவா வழங்கினார்கள்.
உலமாக்களின் பத்வாவின் பிரகாரம் சவுதி பாதுகாப்புப் படையினர்கள் பிரதான வாயில்கள் ஊடாக தாக்குதலை தொடுத்தனர். ஆனால் குழப்பக்காரர்களின் கடுமையான பதில் தாக்குதலினாலும், மினராக்களில் பதுங்கியிருந்தவர்களின் ஸ்நைப்பர் துப்பாக்கி தாக்குதலினாலும் சவுதி பாதுகாப்புப் படையினர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
தொடர் முற்றுகையின் பின்பு இறுதியாக ஒரு வாரத்தில் அதாவது நவம்பர் 27 ஆம் திகதி மஸ்ஜிதுல் ஹரத்தின் பெரும்பாலான பகுதிகளை சவுதி பாதுகாப்புப் படையினர் மீட்டனர். குழப்பக்காரர்களின் வசம் அப்போது பாவனையில் இருந்த நிலக்கீழ் பாதை மட்டுமே இருந்தது. இரண்டு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்த இந்த முற்றுகையானது புனித மஸ்ஜிதுல் ஹரத்துக்குள் 255 பேர்களின் மரணத்துடன் வன்முறை முடிவுக்கு வந்தது. இறந்தவர்களில் 127 சவுதி பாதுகாப்புப் படையினர்களும், 117 குழப்பக்காரர்களும் என்று அறிக்கைகள் கூறுகின்றன.
இறுதியில் ஜுஹைமான் மற்றும் இமாம் மஹ்தி என்று அறிவித்த அவரது மைத்துனன் உற்பட 67 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.
Post a Comment