"என் 2 குழந்தைகளையும் தன் பக்கம், அழைத்துக்கொண்ட வல்ல நாயனுக்கு நன்றிகள்"...!
இந்த வார்த்தையை கேட்டு அதிர்ந்து போனேன். ஆறுதல் சொல்லச் சென்ற நான் ஆறுதல் பெற்றேன்.
ஏன் என்று காரணம் கேட்பதற்கு முன் அந்த தாய் அழகான காரணத்தைச் சொன்னார்.
எனது இரு குழந்தைகளும் இணைபிரியாத தோழிகள். ஒரு கணப் பொழுதேனும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிய மாட்டார்கள்.
பிரியாத இந்த தோழிகள் நேற்று பிரியாமலே என் இறைவனை நோக்கி சென்று விட்டார்கள்.
"ஒரு மகள் உயிர்தப்பி இருந்தால், அடுத்த மகள் படாதபாடுபட்டிருப்பாள். இருவரையும் இழந்து தவிக்கும் வேதனையை விட ஒருவர் உயிர் தப்பினால் அந்த வேதனையை எங்களால் தாங்க முடியாது".
"இவர்கள் இருவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எப்பொழுதும் குதூகலித்துக் கொண்டு தமாஷாக இருப்பார்கள்.
எனது மகிழ்ச்சியான இரு குழந்தைகள் நேற்று காலை 7 .15 க்கு மிக ஆவலுடன் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு பாதையில் ஏறினார்கள். நான் பாதை வரை சென்று அவர்களை பாதையில் ஏற்றி விட்டு திரும்பி வந்து விட்டேன்.
எனது கணவர் கல்முனை பேருந்தில் வேலை செய்கின்றார். நானும் வீட்டில் அடுத்த குழந்தையை பராமரித்துக் கொண்டிருந்தேன். இவர்களோடு சேர்ந்து போக என்னால் முடியவில்லை.
இழுவைப் பாதையை விடMotor பாதை வேகமானது என்று பாதுகாப்பு குறைந்த பாதையை தெரிவு செய்து கொண்டார்கள்.
மரணம் அவர்களை வா வா என்று அழைத்து சுவனம் செல்லுங்கள் என்று இறைவனின் விதி அழைத்துக் கொண்டதோ!
பாதுகாப்பான பாதைதானே என்று நான் பாதியில் விட்டுவிட்டு வந்தேன். இறைவனின் விதி இப்படி நடந்துவிட்டது.
நான்கு மாதங்களுக்குப் பின்னர் பாடசாலைக்கு செல்லப் போகிறோம். அதுவும் பாதையில் செல்லப் போகிறோம் என்று ஞாயிற்றுக்கிழமை குதூகலித்துக் கொண்டு அக்காவும் தங்கையும் மகிழ்ச்சி பிரவாகத்தில் எங்களுடைய போனை எடுத்துக்கொண்டு பதிவு செய்த வீடியோவைப் பாருங்கள் "என்று என்னிடம் காட்டி தங்களுடைய கவலையை மறைத்துக்கொண்டு இறைவனின் நாட்டம் இதுதான் என்று ஏற்றுக்கொண்டு எங்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பிய ஒரு வீரத்தாய்.
அல்லாஹ் இவருக்கும் இவரது கணவருக்கும் அழகிய பொறுமையைக் கொடுப்பானாக!
"ஆசை ஆசையாக வளர்த்தோம். எனது கணவனின் தாயைத்தேடி இருவரும் கைகோர்த்துச்செல்வார்கள்.
அவ்வாறே அதிகாலை கை கோர்த்து சென்ற என் குழந்தைகள் கைகோர்த்த மாதிரியே ஜனாஸாவாக வீடு வந்து சேர்ந்தார்கள்".
என்று அந்தத் தாய் ஒப்பாரி வைக்காமல் ஓலமிடாமல் தன் சோகக்கதையை சொல்லி முடித்தாள் அந்த தாய் . இதனை பொறுமையோடு கேட்க எனக்கும் முடியவில்லை ; என்னோடு வந்த சகோதரர் நிஜாமுதீன் சேருக்கும் முடியவில்லை.
எங்கள் கண்கள் குளமாகின. அருகே உட்கார்ந்து அமைதியாய் சோகங்கள் ஆட்கொண்டு காட்சி தந்த தந்தை கூறினார் "இரண்டு நாட்களுக்கு முன் அப்பியாசக் கொப்பிகள் வாங்கித்தாருங்கள் தந்தையே என்று செல்லமாக கேட்டார்கள்" என்று !
கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு வந்தோம்.
இந்த பரிதாபகரமான கதையைக்கேட்டு எதுவும் மேற்கொண்டு பேசாமல் எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஆறுதல் வார்த்தைகள் எதுவும் கூறமுடியாமல் வீடு திரும்பினோம்.
உங்கள் 8 வயது பாத்திமா சிறீன்
மற்றும் 6 வயது நிரம்பிய பாத்திமா ஸஹ்லா - இருவரும் சுவனப் பூஞ்சோலையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டும் சொல்லிவிட்டு வந்துவிட்டோம்.
எத்தனையோ செல்லமாக பேசி விளையாடிய வீடியோக்கள் என்னிடம் உள்ளன. அவற்றை நான் இங்கு பதிவிட விரும்பவில்லை.இந்தப் பெற்றோருக்கு மகத்தான பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் மாபெரும் இழப்பை அழகாக இட்டுக் கொள்ளும் பக்குவத்தையும் மென்மேலும் வழங்குவாயாக யா அல்லாஹ்.
வலி தாங்க முடியாமல் எழுதிய வரிகள் இவை.
அந்தப் பெண் சொன்ன வார்த்தைகளை காய்தல் உவத்தல் இன்றி அப்படியே எழுதினேன்.
கனத்துப் போன நெஞ்சுடன் வலி தாங்க முடியாமல் தவிக்கும்
அப்துல் அஸீஸ்
24.11.2021
Post a Comment