காட்டு விலங்குகளைப் போன்று, என்னை சிறைக் கூண்டில் அடைத்து வைத்துள்ளார்கள் - Jaffna Muslim இணையத்திற்கு றிசாத் சிறப்புச் செய்தி
- Anzir -
கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனுடன் Jaffna Muslim இணையத்திற்கு 05-10-2021 அன்று உரையாடக் கிடைத்தது.
இதன்போது அவர், பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார்
IS பயங்கரவாதிகளுடனோ அல்லது சஹ்ரான் கும்பலுடனோ தமக்கு அணு அளவேனும் எந்தவித தொடர்பும் இல்லையெனக் கூறிய றிசாத், வடக்கிலிருந்து பயங்கரவாதிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்ட தமக்கு மற்றுமொரு பயங்கரவாதக் குழுவுக்கு ஆதரவளிக்க வேண்டிய தேவை இல்லையெனக் குறிப்பிட்டார்.
நான் எந்தவித குற்றமும் செய்யாத நிலையிலும், எந்தவித குற்றமும் நிரூபிக்கப்படாத நிலையிலும் என்னை சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள். ஒரு நாளைக்கு ஒரு தண்ணீர் போத்தல் வழங்குகிறார்கள். அதில்தான் தொழுகைக்காக வுழுச் செய்வேன். சுன்னத்தான நோன்பு பிடிப்பதற்காக அதிகாலையில் எழுந்தாலும் சிறைக்கூண்டிலிருந்து வெளியே வர முடியாது. பாத்ரூமின் நிலைமை மிகப் பாரதூரமானது.
எனினும் நான் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. அல்லாஹ்வின் உதவியுடனும், மக்களின் பிரார்த்தனைகளின் அங்கீகாரத்துடனும் விரைவில் சிறையில் இருந்து மீளுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
அப்பாவியான எனனை அநியாயமாக சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள். எனது விடுதலைக்காகவும் என்னைப் போன்று சிறையில் உள்ள அப்பாவிகளின் விடுதலைக்காகவும் தொடர்ந்து பிரார்த்திக்குமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களிடமும், வெளிநாடுகளில் பாரந்து வாழும் இலங்கை முஸ்லிம்களிடமும் உரிமை கலந்த உறவுடன் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நீதிமன்றங்களின் மீதும், சட்டத்தின் மீதும் எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எனினும் அரசியல் தலையீடுகளுடன் என்னை பழிவாங்கி, எனது குரலை துவம்சம் செய்ய வேண்டுமெனத் துடிக்கும் சில சக்திகள், எனது அரசியல் வாழ்க்கையை அழித்துவிட அத்தனை சதிகளையும், போலிப் பிரச்சாரங்களையும் முன்னெடுத்துள்ளார்கள்.
எனினும் எல்லாவற்றுக்கும் மேலான இறைவனின் துணையுடனும், மக்களின் ஆதரவுடனும் இந்த சதிகளை முறியடிக்க நான் உறுதியாக உள்ளேன்.
மரண தண்டனைக் கைதியான ஒரு பாராளுமன்ற உறுப்பினர், சிறைச்சாலையில் அனுபவிக்கும் சுகபோகங்களை இங்கு நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரான, எனது சிறப்புரிமை கூட சீரழிக்கப்பட்டு, குரோதங்கள் என்மீது குவிக்கப்பட்டு, எப்படியேனும் என்னை குற்றவாளியாக்கிவிட முயற்சிக்கிறார்கள். குற்றம் செய்யாத என்னை, சில ஊடகங்கள் மூலம் குற்றவாளியாக்கப் பார்க்கிறார்கள். அதற்காகவே என்னைப் பற்றிய போலிச் செய்திகள் அடிக்கடி பரப்பப்படுகின்றன எனவும் சிறாத் பதியுதீன் Jaffna Muslim இணையத்திடம் மேலும் தெரிவித்தார்.
சிறையிலிருந்து நீங்கள் விரைவில் விடுதலை பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை புரிகிறேன்.
ReplyDelete-எம்.ஜே.எம். தாஜுதீன்