கிண்ணியா விவசாயிகளின் சோகம்
- ஹஸ்பர் ஏ ஹலீம் -
தற்போது பெய்து கொண்டிருக்கும் மழை காரணமாக கிண்ணியாவின் புளியடிக்குடா, பக்கிரான் வெட்டை, வன்னியனார் மடு வயல் பிரதேசங்களில் இன்று(31)வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீதிகளும் வயல் நிலங்களும் அணைக்கட்டுகளும் சேதமடைந்து அழிந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
சுமார் 2000 ஏக்கருக்கு மேற்பட்ட வயல் நிலங்கள் இதனால் பாதிப்படைந்து, வீதிகளும் அணைகளும் ஒவ்வொரு முறையும் பாதிப்படைந்து கொண்டே இருக்கின்றன.
40 அடி அகலமும் 10 அடி ஆழமும் கொண்ட இந்த பிரதான வடிச்சல் ஆற்றினை குறுக்காக மரித்து கட்டுவதன் மூலமே வயல்களுக்கு நீரை பாய்ச்சுகின்றோம்.
அதிக மழை பொழிகின்ற போது குறுக்காக கட்டப்படும் மரிப்பை அகற்ற முடியாமையினால் இவ் ஆறு பெருக்கெடுத்து நீர் மட்டம் உயர்வடைவதனால் இவ்வாறான துன்பங்களுக்கு விவசாயிகள் முகம் கொடுக்கின்றார்கள்.
இந்த நவீன காலத்திலும் முறையான ரெகுலேற்றர் பொறிமுறை இன்றி இவ் விவசாயிகள் ஒவ்வொரு போகத்திலும் பல தடவைகளில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.
அதிகாரிகளிடத்திலும் அரசியல்வாதிகளிடத்திலும் ரெகுலேட்டர் பொறிமுறையை அமைத்துத் தருமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை செய்து தரப்படவில்லை.
எனவே விவசாய அமைச்சர் ஜனாதிபதி ஆகியோர் இதில் கரிசனையை கொண்டு உடனடியாக ரெகுலேட்டர் பொறிமுறையை அமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொள்கின்றனர்.
Post a Comment