பிரதமர் மகிந்த - இந்திய வெளியுறவு செயலாளர் இன்று பேசிய விடயங்கள் என்ன...?
அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கௌரவ கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரது வாழ்த்துச் செய்திகளை கௌரவ பிரதமருக்கு முன்வைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தற்போது செயற்பாட்டிலுள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறை, பௌத்த உறவினை மேம்படுத்தல் உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் பல்வேறு துறைகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.
பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு கௌரவ இந்திய பிரதமர் மோதி அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராட்டு தெரிவித்தார். அது கௌரவ பிரதமர் மோதியின் முன்னுரிமையான பணியாக விளங்கியதாக திரு.ஷ்ரிங்லா அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய- இலங்கை பிரதமர்களிடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற இணையவழி இருதரப்பு மாநாட்டின் இறுதியில் இரு நாட்டு மக்கள் இடையிலான ஆழமான உறவை பலப்படுத்தும் நோக்கில் இந்திய பிரதமரினால் பௌத்த உறவின் மேம்பாட்டிற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை அறிவிக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள், இந்தியாவின் குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்பட்ட உடன், இலங்கையிலிருந்து முதல் யாத்ரீக விமானம் வருகைத்தரும் என நம்புவதாக தெரிவித்தார். இந்திய பிரதமர் கௌரவ நரேந்திர மோதி அவர்கள் கடந்த இருதரப்பு மாநாட்டின் போது இதற்கான வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.
சுற்றுலாத்துறையை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பில் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளிலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருகின்மையினால் உறவை மீண்டும் நிறுவுவதன் முக்கியத்துவம் குறித்தும் திரு.ஷ்ரிங்லா அவர்கள் வலியுறுத்தினார்.
கொவிட் தொற்று நிலைமைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் 18 சதவீதமாவதுடன், இந்தியா இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment