லட்சத்தீவில் கைதான சற்குணன், இலங்கையில் புலிகளை கட்டியெழுப்ப முயற்சி - சீமானுக்கும் தொடர்பா...?
லட்சத்தீவின் மினிக்காய் (Minicoy) கடற்கரையில் கடந்த மார்ச் மாதம் ஏ.கே 47 துப்பாக்கிகள், 1000 கிலோ தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில் இலங்கையைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய புலனாய்வு முகமையின் அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த 6 பேர் அளித்த தகவலின்பேரில் இலங்கையை சேர்ந்த சற்குணன் என்கிற சபேசன் குறித்து தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள்களையும் ஆயுதங்களையும் கடத்தி விடுதலைப் புலிகள் அமைப்பை புதுப்பிக்கும் வேலைகளில் சற்குணன் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. சென்னை, வளசரவாக்கத்தில் தங்கியிருந்த சற்குணனின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, கடந்த 6ஆம் தேதி என்.ஐ.ஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில், ` அக்டோபர் 5 ஆம் தேதியன்று புலிகளின் உளவுப் பிரிவின் முன்னாள் உறுப்பினர் சற்குணன் என்கிற சபேசன் கைது செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டார். அதன்மூலம் கிடைத்த பணத்தை புலிகள் அமைப்பின் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புலிகள் அனுதாபிகளோடு அவர் சதிக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்குணனின் கைது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ` இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி செயல்பட்டு வருகிறது. அண்மையில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியையும் சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தும் வகையில் சீமான் பேசியது, சமூக ஊடகங்களில் வெளியானது. இத்தகைய கூட்டங்களில் வன்முறையைத் தூண்டும் வகையிலும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்' என்கிறார்.
தொடர்ந்து அந்த அறிக்கையில், `இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவுடன் தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசனை என்.ஐ.ஏ கைது செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம், ஐயப்பன்தாங்கல் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த இவரிடம் இருந்து அதிர்ச்சியூட்டும் ஆவணங்களும் தமிழ்நாட்டில் இருந்து பெரும் நிதியை இலங்கைக்கு அனுப்பிய ஆதாரங்களும் சிக்கியுள்ளன.
இவர் ஏற்கெனவே போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு 10 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டு அண்மையில்தான் வெளியில் வந்திருக்கிறார். சர்வதேச போதைக் கடத்தலில் சம்பந்தப்பட்டு பாகிஸ்தான், துபாய், இலங்கை என தொடர்பு கொண்டிருந்ததற்கான ஆதாரங்களும் என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் வாழ்கின்ற புலி ஆதரவாளர்கள் இவர் மூலமாக பெரும் நிதியை வழங்கி வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சற்குணனுக்கும் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இவர் மூலமாக பெரும் நிதி சீமானுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்க வேண்டும். இதன் மூலம் தமிழ்நாட்டில் தேச விரோத சக்திகளின் நடமாட்டத்தைத் தடுக்க முடியும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.அழகிரியின் அறிக்கை தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.
``அமைதிப்பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டை சீர்குலைப்பதற்கு தீவிரவாதக் கருத்துகளைக் கூறி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களை சீமான் தூண்டிவிடுகிறார். தேசிய இயக்கங்களுக்கு மட்டும் சீமான் எதிரியல்ல. 50 ஆண்டுகளாக ஆட்சி செய்கிற திராவிட இயக்கங்களின் அடிப்படையைத் தகர்க்கிற வேலையை அவர் செய்து வருகிறார். அவர் விஷயத்தில் அனைத்துக் கட்சிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்கிறார்.
மேலும், ``தமிழக அரசியலில் இருந்து சீமான் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த நாட்டின் ஒற்றுமைக்கு சீமான் எதிரானவர். தனது பேச்சின் மூலம் தமிழகத்தை ஆபத்தான பாதைக்கு அவர் அழைத்துச் செல்கிறார். அவர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி கூறுவதுபோல, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சீமான் அச்சுறுத்தலாக இருக்கிறார். தன்னை ஒரு மனிதப் புனிதர் போலக் காட்டிக் கொள்கிறார். அவருக்கென்று எந்தக் கொள்கைகளும் இல்லை. அவரது செயல்பாடுகள், தமிழகத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும்," என்கிறார்.
இதுதொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசுவதற்காகத் தொடர்பு கொண்டபோது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் அவர் இருப்பதாகத் தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசன், கே.எஸ்.அழகிரியின் குற்றச்சாட்டு தொடர்பாக பிபிசி தமிழிடம் சில விளக்கங்களை அளித்தார்.
அவர் பேசுகையில், ``சற்குணன் கைதை நாம் தமிழர் கட்சியோடு காங்கிரஸ் கட்சி பொருத்திப் பார்த்துப் பேசுகிறது. அது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. இதற்காக கே.எஸ்.அழகிரியின் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளைத்தான் எடுக்க வேண்டும். எதையாவது ஒன்றைப் பேச வேண்டும் என்ற அடிப்படையில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வளசரவாக்கத்தில் சற்குணன் குடியிருந்ததால், `அவருடன் எங்களுக்குத் தொடர்பு' என வன்மத்தில் பேசுவதாகவே இதனைப் பார்க்கிறோம். உண்மைக்குப் புறம்பான அறிக்கை அது" என்கிறார். BBC
So இந்த ஆக்கத்தின் இறுதி வரிகளை வாசிக்கும் பொழுது... தனக்கு ஆபத்து நேர்ந்தால் சீமான் தமிழ் நாட்டில் வசிக்கும் புலி பயங்கரவாதிகளையும் காட்டிக்கொடுத்துவிடுவான்
ReplyDelete