விமான நிலையத்தில் அனிலுக்கு, ஏற்பட்ட தர்ம சங்கடம்
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற சுற்றாடல் அமைச்சின் செயலாளர், முன்னாள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க விமான நிலையத்தில் நேற்று (03) அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
தடுப்பூசி அட்டையினை எடுத்துச் செல்லாமை காரணமாகவே அவர் இவ்வாறு அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அவர் விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.
இதனையடுத்து, அனில் ஜாசிங்க தமது தடுப்பூசி அட்டையின் படத்தைக் கையடக்க தொலைபேசியில் பெற்றுக்கொண்டு, அதனைக் காண்பித்த நிலையில், விமானத்திற்குள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் வேலைத்திட்டத்தின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் அமைச்சர் மற்றும் நிறுவனங்களின் 4 ஆவது அமர்வில் கலந்துக்கொள்வதற்காகவே அவர் நேற்று (03) நாட்டிலிருந்து தென் கொரியா நோக்கிச் சென்றுள்ளார்.
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் இந்த மாநாடு தென்கொரியாவில் இடம்பெறவுள்ளது. 47 நாடுகளின் பிரதிநிதிகள் குறித்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
சட்டம் தன் கடமையை செய்யும்
ReplyDelete