Header Ads



ஜனாஸாக்களை எரித்தபோது துணிச்சலுடன் தடையுத்தரவு பிறப்பித்த நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன், முஸ்லிம்களின் தயங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளார் - பாராட்டு விழாவில் புகழாரம்


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டபோது அம்பாறை மாவட்டத்தில் பலரது ஜனாஸாக்களை எரிக்காமல் பாதுகாக்கும் வகையில் துணிச்சலுடன் தடையுத்தரவு பிறப்பித்து, தீர்ப்புகளை வழங்கிய நீதி தேவதையான கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள், முஸ்லிம் சமூகத்தின் இதயங்களில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார் என்று சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலரும் புகழாரம் சூட்டியுள்ளனர்.

கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தனது 20 வருட கால நீதிச் சேவையிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு, அவரைப் பாராட்டி கௌரவிக்கும் பெரு விழா நேற்று சனிக்கிழமை (30) கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது வாழ்த்துரை நிகழ்த்துகையிலேயே சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஐ.எல்.எம்.ரமீஸ் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனுக்கு சங்கத்தின் சார்பில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் விசேட நினைவுச் சின்னம் வழங்கி, வாழ்த்துரை நிகழ்த்தினார். அத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி றைசுல் ஹாதி, நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் தம்பதியினரை பொன்னாடை போர்த்தி, வாழ்த்துரை நிகழ்த்தினார்.

மேலும், சிரேஷ்ட சட்டத்தரணிகளான எம்.எஸ்.எம்.ஜெமீல், ஏ.எம்.பதுர்தீன், அன்சார் மௌலானா, ஆரிப் சம்சுதீன், யூ.எம்.நிசார், ஏ.எல்.நதீர், எம்.எஸ்.எம்.ரஸ்ஸாக், லியாகத் அலி, சாரிக் காரியப்பர், கலாநிதி ஏ.எல்.ஏ.கபூர் ஆகியோரும் நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரனின் நீதித்துறை புலமை, மனிதாபிமானம், அர்ப்பணிப்பு, மற்றும் நெறி தவறா நேர்மையுடன் கூடிய பண்புகளையும் ஆற்றல்களையும் துணிச்சலான தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினர்.

கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்க முன்னர் நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலாத்காரமாக எரிக்கப்பட்டன. முஸ்லிம் சமூகம் கதறக்கதற இந்த அநியாயம் அரங்கேற்றப்பட்டது. முஸ்லிம்களின் அடிப்படையானதும் தவிர்க்க முடியாததுமான உரிமையொன்று மறுக்கப்பட்டது. இந்த அநியாயத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தன. கல்முனை உட்பட பல பகுதிகளிலும் கீழ் நீதிமன்றமான நீதவான் நீதிமன்றங்கள் இவ்வாறான வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லையென கைவிரித்திருந்தன.

இத்தகைய சூழ்நிலையில்தான் அம்பாறை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த பலரது ஜனாஸாக்கள் குறித்து கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன் குறித்த ஜனாஸாக்களை எரிக்காமல் வைத்திருக்குமாறு நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள் கட்டளையிட்டு, அவற்றை நல்லடக்கம் செய்யும் வரை பாதுகாத்து வைக்கும் வகையில் தனது பதவியையும் உயிரையும் துச்சமெனக் கருதி, துணிச்சலான தீர்ப்புகளை வழங்கியிருந்தார் என்று சட்டத்தரணிகள் பலரும் தமதுரையின்போது சுட்டிக்காட்டி, முஸ்லிம் சமூகத்தின் சார்பில் பாராட்டுத் தெரிவித்துக் கொண்டனர்.

'நீதி தேவதை' என்பதற்கு தராசை ஏந்தியிருக்கும் ஒரு சிலைதான் காண்பிக்கப்படும். ஆனால், நிஜத்தில் அத்தகையதொரு நீதி தேவதையாக ஸ்ரீநிதி அம்மையாரைக் காண்கிறோம் என்றும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.