Header Ads



முஸ்லிம் தனியார் சட்டம் இல்லாதொழிப்பதைக் கண்டித்து, கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்


(அஸ்லம் எஸ்.மௌலானா)

முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணை கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல்

மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது மாநகர சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான சட்டத்தரணி ரொஷான் அக்தரினால் இக்கண்டனப் பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இதனை கல்முனை மாநகர சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான பி.எம்.ஷிபான் வழிமொழிந்து உரையாற்றினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்றி மகேந்திரன், சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸீம் ஆகியோரும் பிரேரணையை ஆதரித்து கருத்துத் தெரிவித்தனர்.

இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் பன்னெடுங்காலமாக அனுபவித்து வருகின்ற முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம் மற்றும் அதன் கீழ் வருகின்ற காதி நீதிமன்றம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு பேரின கடும்போக்குவாதத்தை கடைப்பிடித்து வருகின்ற இந்த அரசாங்கம் திட்டமிட்டு முன்னெடுத்து வருகின்ற நடவடிக்கைகள் மிகவும் கவலைக்கும் கண்டனத்துக்குமுரிய விடயமாகும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆகையினால் இச்சட்டத்தில் முஸ்லிம் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, இச்சட்டமும் அதன் கீழான காதி நீதிமன்றமும் தொடர்ந்து அமுலில் இருப்பதற்கு அரசாங்கம் இடமளிக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.  

இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாதொழிக்கும் அரசின் திட்டத்திற்கு எதிரான கண்டனப் பிரேரணை தமிழ் உறுப்பினர்களினதும் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகர சபையின் இத்தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு உடனடியாக அறிவிக்குமாறு மாநகர முதலவர், சபைச் செயலாளரை அறிவுறுத்தினார்.

No comments

Powered by Blogger.