ஈஸ்டர் தாக்குதலை ஒரு சிலரே மேற்கொண்டார்கள், ஆனால் அனைத்து முஸ்லிம்களும் பழிவாங்கப்பட்டார்கள்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை திசைதிருப்ப முயற்சிக்கிறார்களோ என சந்தேகிக்க வேண்டியுள்ளது. எமது நாட்டில் மீண்டும் இன மற்றும் சமயங்களை அடிப்படையாகக்கொண்டு அமைதியின்மையை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மிகவும் அபாயகரமான நிலைமையாகும்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் சூழ்நிலையிலே இது நடைபெறுகிறது என ஆயர் கீர்த்திசிறிபர்ணாந்து ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இம்முயற்சிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை திசை திருப்புவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என நாம் சந்தேகிக்கின்றோம். நியூஸிலாந்தில் இலங்கையரொருவர் மேற்கொண்ட தாக்-குதலையடுத்து அந்நாட்டின் பிரதமர் இலங்கையை குற்றம் சுமத்தவில்லை.சிங்கள கத்தோலிக்கர் மற்றும் பெளத்தர்களுக்கிடையே சிலர்அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் இதனை கிறிஸ்தவர்கள் சர்வதேசத்துக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. கிறிஸ்தவ சமயம் சர்வதேசத்துடன் தொடர்புடைய சமயமாகும். அரசாங்கத்துக்கும் சர்வதேச தொடர்புகள் இருக்கிறது.
சிறியவோர் குழுவொன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது. இதனை நாம் ஏற்கனவே கூறியுள்ளோம். உயிர்த்த ஞாயிறு அன்று ஹோட்டல்கள், ஆலயங்கள் தாக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையானோர் பலியானார்கள் கட்டுவாப்பிட்டியில் பலியானவர்களில் முஸ்லிம்களும் அடங்கியுள்ளனர். கிறிஸ்தவர்கள் மாத்திரமல்ல.இது சர்வதேச பிரச்சினையாகியுள்ளது.
நாம் அனைவரும் சமய வேறுபாடுகளின்றி ஒன்றிணைய வேண்டும். இத்தாக்குதலுக்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இருந்துள்ளதாக மக்கள் சந்தேகிக்கின்றனர். வீடுகளில் ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட இராணுவம், பொலிஸார் விரைவில் செயற்பட்டு அதனைக் கண்டு பிடிக்கிறார்கள். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளை தேடிக்கண்டு பிடிப்பதாகத் தெரியவில்லை. அரசு இன்னும் கால அவகாசம் தேவை என்கிறது.இப்போது இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. விரைவில் இதற்குத்தீர்வு தேவை.
ஜனாதிபதி ஐ.நா. கூட்டத்தொடரில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இனிமேல் இலங்கையில் இடமளிக்கப்படமாட்டாது எனக் கூறியுள்ளார். அதற்காக அவருக்கு நாம் நன்றிகூற வேண்டும் என்றாலும் அவ்வாறான நிலைமை இன்று இலங்கையில் இல்லை என்பதற்காக நாம் கவலைப்படுகிறோம். ஏதாவது ஒரு சம்பவம் அமைதியின்மை ஏற்பட்டால் அதற்கெதிராக அரசு அல்லது அரச அதிகாரிகள்செயற்படுவதாகத் தெரியவில்லை. அதற்கு இடமளிப்பதாகவே தெரிகிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு நாம் இதனைக் கண்டோம். தாக்குதலை ஒரு சிலரே மேற்கொண்டார்கள். ஆனால் அனைத்து முஸ்லிம்களும் பழிவாங்கப்பட்டார்கள்.
பல்லினம், பல் சமயங்களைக் கொண்டதே இலங்கையாகும். நாட்டில் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ வேண்டும். இனம் சமயங்களுக்கு எதிராக செயற்படவேண்டாம். என நாம் அனைவரையும் வேண்டுகிறோம். இதனை ஜனாதிபதியும் ஐ.நாவில் உறுதிபடுத்தியுள்ளார். நாம் சமயங்களை எமது கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம்.
ஒரு இனத்தை அல்லது ஒரு மதத்தை தாக்குவது பாவமாகும். இப்பாவத்தைச் செய்யவேண்டாமென நாம் அனைவரையும் வேண்டிக்கொள்கிறோம்.
அரசியலுக்கு வருவதற்கோ அரசியல் அதிகாரத்தைக் பெற்றுக்கொள்வதற்கோ பாதுகாத்துக் கொள்வதற்கோ சமயத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றார்.-Vidivelli
Post a Comment