ஆப்கானிஸ்தானில் ஷியாக்களின் மசூதியில் தற்கொலை தாக்குதல் - 50 பேர் மரணம்
ஆப்கானிஸ்தானின் வட பகுதியில் உள்ள குண்டூஸ் நகரில், செய்து அபாட் மசூதியில் நடந்த இந்தத் தாக்குதலில் இறந்தவர்கள் உடல்கள் மசூதி முழுவதும் பரவிக் கிடந்தன. தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், ஐ.எஸ். உள்ளிட்ட முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் சிறுபான்மை ஷியாளை இலக்குவைத்து வந்தனர்.
இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதக் குழுவின் வட்டார அமைப்பாக கருதப்படும் ஐ.எஸ் -கே ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை கடுமையாக எதிர்க்கிற ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு சமீப காலத்தில் பல தாக்குதல்களை குறிப்பாக நாட்டின் கிழக்குப் பகுதியில் நடத்தியுள்ளது.
மசூதியில் தாக்குதல் நடந்தபோது 300க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தொழுகையின்போது நடந்த தாக்குதலுக்குப் பிறகு ரத்த தானம் ஏதும் தேவைப்படுமா என்று விசாரிக்க மருத்துவமனைக்கு சென்ற உள்ளூர் வணிகர் ஜல்மாய் அலோக்சாய் கொடூரமான காட்சிகளைக் கண்டதாக விவரிக்கிறார்.
"இறந்தவர்களின் உடல்களை ஏற்றிவர சம்பவ இடத்துக்கு மீண்டும் ஆம்புலன்ஸ்கள் செல்கின்றன," என்று அவர் ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்தபோது மசூதியில் 300க்கு மேற்பட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி டோலோ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment