2022 பட்ஜட் நவம்பர் 12 சமர்ப்பிப்பு - அரசாங்க மொத்த செலவீனம் ரூ. 2,505.3 பில்லியன்
2022ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று (07) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் என்ற வகையில் பசில் ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, 2020ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கமைய, அரசாங்கத்தின் மொத்த செலவீனம் ரூ. 2,505.3 பில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில், ரூ. 1,776 பில்லியனுக்கும் அதிகமானவை மீண்டும் வரும் செலவீனமாகும்.
இவ்வருடத்திலான ரூ. 2,538 பில்லியன் செலவுடன் ஒப்பிடுகையில் அடுத்த வருட அரசாங்க செலவு ரூ. 33 பில்லியன் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
பொது சேவைகளுக்கான அதன் மொத்த ஒதுக்கீடு ரூ. 12.6 பில்லியன் ஆகும்.
அதில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், நீதித்துறை, பாராளுமன்றம், ஆணைக்குழுக்கள் ஆகியன அடங்குகின்றன.
அடுத்த வருடத்திற்கான ஜனாதிபதியின் செலவு ரூ. 2.78 பில்லியன் ஆகும். அதன்படி, கடந்த ஆண்டை விட ஜனாதிபதியின் செலவு ரூ. 6.6 பில்லியன் குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்திலும் பாதுகாப்புச் செலவுக்கே அதிக ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, பாதுகாப்பு செலவினங்களுக்காக ரூ. 355 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வருடத்துடன் ஒப்பிடும்போது பாதுகாப்பு செலவு ரூ. 18 பில்லியன் அதிகரிக்கப்பட்டு, ரூ. 373 பில்லியனாக 2022 இற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பிற்கு அடுத்ததாக, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வமைச்சுக்கு ரூ. 286.7 பில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ. 286 பில்லியன் மீண்டு வரும் செலவீனமாகும்.
அதற்கு அடுத்து, நெடுஞ்சாலை அமைச்சுக்கு ரூ. 250.1 பில்லியன் ஒதுக்கிடப்பட்டுள்ளதுடன், இதில் ரூ. 250 பில்லியன் மூலதனச் செலவாகும்.
கல்வி அமைச்சுக்கு இவ்வாண்டு ரூ. 126.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்த ஆண்டு ரூ. 127.6 பில்லியன் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு ரூ. 153.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இவ்வருடத்துடன் ஒப்பிடும்போது சுமார் ரூ. 6 பில்லியன் குறைவாகும்.
நிதி அமைச்சுக்கு ரூ. 185.9 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துடன் ஒப்பிடுகையில் இது ரூ. 28 பில்லியன் அதிகமாகும்.
வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு எனப்படும் வரவு செலவுத் திட்ட உரையை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பிற்பகலில் பாராளுமன்றத்தில் மேற்கொள்ளவுள்ளார்.
வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு டிசம்பர் 10ஆம் திகதி இடம்பெறும்.
Post a Comment