ஈஸ்டர் தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி ஒருவர் உள்ளார்..? சஹ்ரானின் மதர் போர்ட்டை எடுத்தது யார்..? தயாசிறியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் சதித்திட்டம் இதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவை சிக்க வைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது எனக் கூறியுள்ள தயாசிறி, அதன் பின்னணியில் இருப்பது யார் என்ற தகவலை வெளியிடவில்லை.
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து ஏன் பேசுவதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது பற்றி பேசுவார்கள் மீது அரசியல் ரீதியான பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி ஒருவர் இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியை அமைச்சர்கள் திட்டுவதால், பயனில்லை. அதற்கு பதிலாக அந்த தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி யார் என்பது அவர்கள் கண்டறிய வேண்டும். அப்போது அதில் சம்பந்தப்பட்ட ஏனையோரை கண்டறிய முடியும்.
சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த மதர் போர்ட்டை எடுத்தது யார், அதனையே முதலில் தேட வேண்டும். குண்டு தாக்குதல் நடத்திய நபரின் தொலைபேசியில் அனைத்து தகவல்களும் உள்ளன.
அந்த தகவல்கள் அடங்கிய மதர் போர்ட்டை ஏதோ ஒரு நாட்டை சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் வேறு நாட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
அவ்வாறு எடுத்துச் செல்ல இலங்கையின் நீதிமன்றமும் பொலிஸாரும் இடமளித்தமை பிரச்சினைக்குரியது. மதர் போர்ட்டை எடுத்துச் சென்றவரிடம் விசாரணை நடத்தினால், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது அறிய முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளதாக தெரியவருகிறது. TW
Post a Comment