கட்டுக்கதைகளே தடுப்பூசி போடாதிருக்க காரணம் - Dr பிரசன்ன குணசேன
தவறான தகவல்கள் காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 40,000 பேர் தடுப்பூசி போடாமல் உள்ளனர் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டாக்டர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் உரையாற்றிய டாக்டர் குணசேன, ஒரு வகை தடுப்பூசி மற்றொன்றை விட சிறந்தது அல்லது ஒரு குறிப்பிட்ட வகை மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்களுக்கு சிறந்தது போன்ற கட்டுக்கதைகள் காரணமாக பலர் தடுப்பூசிகளை எடுக்க மறுப்பதாகத் தெரிவித்தார்.
‘தடுப்பூசி பெறுவதைத் தடுக்கும் விதமாக நோய்கள் அல்லது குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை என்ற போர்வையில் வேறு சில கட்டுக்கதைகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. உண்மையில், ஏனைய நோய்களைக் கொண்டவர்களே முதலில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள வேண்டும்’ எனவும் அவர் தெரிவித்தார்.
நோயை எதிர்த்துப் போராடுவதற்கும், பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை மோசமடையாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், தடுப்பூசி எந்தவொரு வகையைச் சேர்ந்ததாயினும் விரைவாகப் பெறுவதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் குணசேன விளக்கினார்.
‘தடுப்பூசியின் ஒவ்வொரு வகையும் மற்றயதைப் போலவே வினைத்திறனானதாகும் என்பதோடு வெற்றிகரமானதுமாகும். ஆனால் சிலவற்றில் மற்றயவைகளை விட கொவிட் -19 உடன் வரும் சளி மற்றும் காய்ச்சலைத் தடுக்கும் திறன் இருக்கலாம். இதில் முக்கியமானது என்னவென்றால், எந்தவொரு கொவிட்-19 தடுப்பூசியும் கொவிட்-19 காரணமாக இறக்கும் வாய்ப்பை சடுதியாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டவையாகும். இதனால்தான் கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம் என்றும் அனைவரும் தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.- Vidivelli
Post a Comment