தேர்தல் குறித்த நிபுணர் குழுவில், முஸ்லிம் பிரதிநிதிக்கு இடமில்லை - சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு
இந்நிபுணர் குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரேனும் நியமிக்கப்படாமை குறித்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் விசனம் தெரிவித்துள்ளன.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான நிபுணர்கள் குழுவின் தலைவராக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி அநுர கருணாதிலக, சட்டத்தரணி சுரேன் பர்ணாந்து, பேராசிரியர் பி.பாலசுந்தரம்பிள்ளை, பாலசந்திரன் கௌதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பதற்காக பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் பகுப்பாய்வு செய்வதற்கே குறிப்பிட்ட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு நியமிக்கப்படும்போது பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவது வழமையாகும். தெரிவுக் குழுக்களில் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் ரவூப் ஹக்கீமும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிசாத் பதியுதீனும் இடம்பெற்று வந்துள்ளளனர். ஆனால் தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கான தற்போதைய விஷேட தெரிவுக்குழுவில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிமும் மற்றும் அமைச்சர் அலிசப்ரியுமே இடம்பெற்றுள்ளனர். முஸ்லிம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவில்லை.
இதேவேளை நிபுணர் குழுவில் முஸ்லிம்கள் எவரும் இடம்பெறாமை குறிப்பிடத்தக்கதாகும். தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவுக்கு அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகள் மற்றும் 155 சிவில் அமைப்புகளினால் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் செயலாளரும் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார். குறிப்பிட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிதற்கு வழங்கப்பட்டிருந்த கால எல்லை கடந்த 15ஆம் திகதி (ஜூலை) யுடன் முடிவுற்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழுவில் பிரதான இரு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாமை குறித்தும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளும் புத்திஜீவிகளும் ஏற்கனவே விசனம் தெரிவித்திருந்ததுடன் கண்டனம் வெளியிட்டிருந்தனர் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் பிரதான முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியோ அல்லது முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியோ ஒருவரேனும் நியமிக்கப்படாமை முஸ்லிம் அரசியல் கட்சிகளை நசுக்கும் முயற்சியாகும்.
அரசுக்கு ஆதரவு வழங்கிவரும் மற்றும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்நிலைமையினை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிபுணர் குழுவில் முஸ்லிம் பிரதிநிதிகளை உள்வாங்கிக் கொள்வதற்கு ஆவன செய்ய வேண்டும் எனவும் என்.எம்.அமீன் தெரிவித்தார்.- Vidivelli
அதற்கு இன்னொரு அஷ்ரப் பிறக்கனும்
ReplyDelete