Header Ads



இரத்தம் சிந்தாமல் தலிபான்களிடம் ஆட்சிப்பொறுப்பு கைமாறுமா..? தீர்மானமிக்க பேச்சு ஆரம்பம் - காபூல் சுற்றிவளைப்பு


ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா சிறப்புப் பிரதிநிதியுடன் அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கானி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், அமைதியான வழியில் ஆப்கானிஸ்தானில் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைக்க அங்குள்ள அமைச்சர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

இது தொடர்பாக டோலோ டிவி என்ற உள்ளூர் தொலைக்காட்சியில் தோன்றிய ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர், "அமைதியான வழயில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்படும்," என்று கூறினார். காபூல் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஆட்சி ஒப்படைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்காக தாலிபன் பிரதிநிதிகள் அதிபர் மாளிகை நோக்கி சென்றுள்ளதாக ஆப்கன் அதிகாரியை மேற்கோள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் என்ற சர்வதேச செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, காபூல் நகர எல்லைகளில் காத்திருக்குமாறு தமது போராளிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தாலிபன்கள் தெரிவித்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் பல திசைகளில் இருந்து தாலிபன்கள் நுழைவதாக செய்திகள் வருகின்றன. காபூல் நகரில் அவர்களுக்கு பெரிதாக எதிர்ப்பு இல்லை என்கிறார் பிபிசியின் யால்தா ஹக்கிம். ஆனால், காபூலில் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக ஆப்கானிஸ்தான் அதிபரின் டிவிட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூலில் ஆங்காங்கே துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும், ஆனால், காபூல் நகரம் தாக்கப்படவில்லை என்றும் நாட்டின் பாதுகாப்புப் படையினரும், வெளிநாட்டுக் கூட்டாளிகளும் இணைந்து நகரின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. BBC

No comments

Powered by Blogger.