இந்த நாளில்தான் ஒரு துரோகியின் துப்பாக்கி ரவை, அலி உதுமானின் மூச்சை நிறுத்தியது...!
ஓகஸ்ட் முதலாம் திகதி, ஒரு பாரம் நெஞ்சை அழுத்திக் கொண்டே இருக்கும்; கண்கள் கசியும். ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் அலி உதுமான் சேரின் நினைவுகளைக் கடந்து செல்ல முடிவதில்லை.
இந்த நாளில்தான் ஒரு துரோகியின் துப்பாக்கி ரவை, அவரது மூச்சை நிறுத்தியது.
எங்களது வகுப்பிற்கு உயரமான ஒரு மனிதர் ஆங்கிலப் பாட ஆசிரியராக வந்தார். மெலிந்த தோற்றம் கொண்ட அவர் வகுப்பறையைக் கலகலப்பாகினார். ஒரு தோழனைப் போல எல்லோரையும் நெருங்கி வந்தார். வகுப்பிலுள்ள எல்லா மாணவர்களையும் பெயர் சொல்லி அழைத்தார். மிகக் குறுகிய நாட்களில் எல்லோருக்கும் அவர் மீது ஆழமான பிடிப்பும் பிணைப்பும் ஏற்பட்டு விட்டது.
அவர் ஆங்கிலம் மட்டும் படிப்பிக்கவில்லை. வாழ்க்கையைப் படிப்பித்துத் தந்தார். சில French வசனங்களையும் படிப்பித்தார். இவருக்கு எப்படி பிரெஞ்சு மொழி தெரியும் என்று வியந்திருக்கிறேன். களனிப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, Mass Communication, French, Economics ஆகிய பாடங்களைப் பயின்றிருக்கிறார். அந்தக் காலத்தில் French படித்திருப்பதே அவரின் தனித்துவ ஆளுமையை அளவிடப் போதுமானது.
1984 இல் எனது மச்சியைத் திருமணம் செய்ததனால், குடும்ப உறவினர் ஆனார். எங்களது வீட்டுக்கு இரு வீடுகள் தள்ளித்தான் அவர்களது வீடு இருந்தது. தினமும் சந்திக்கும் ஒருவராக மாறியிருந்தார். ஒன்றாகத்தான் பள்ளிக்கு நடந்து போவோம். "அஸ்ஸலாமு அலைக்கும் யா றபீக்" என்பார். 'றபீக்' என்றால் நண்பன் என்று அவர்தான் அர்த்தம் சொன்னார். பள்ளிக்குப் போகும்போது எங்களது தோளில் கைபோட்டபடிதான் நடந்து வருவார். வயது இடைவெளிகளை வென்ற மனிதர் அவர்.
1984 இற்குப் பின்னர் ஆயுத அராஜகம் தீவிரம் பெறத் தொடங்கியது. துப்பாக்கிகளின் குறி திசை மாறத் தொடங்கியது.
1985 இல் கிழக்கில் தமிழ் - முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. 1986 முதல் முஸ்லிம் காங்கிரஸ் அலை வீசத் தொடங்கியது.
1987 இல் அலி உதுமான் சேர், யாருமே எதிர்பாராமல் திடீரென அரசியல் பிரவேசம் செய்தார். முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து, பட்டி தொட்டியெல்லாம் பிரச்சாரம் செய்தார். மிகுந்த அர்ப்பணிப்போடு அக் கட்சியை மக்கள் மயப்படுத்தினார். ஒன்பதாம் வகுப்புப் படிக்கும்போது என்னைக் கூட அக்கட்சியில் உத்தியோகப் பற்றற்ற முறையில் இணைத்தார். சந்தாப் பண றிசீற்றை அவர் கிழித்துத் தந்த காட்சி இப்போதும் கண் முன்னே நிழலாடுகிறது. கட்சிப் பத்திரிகையையும் வெளியீடுகளையும் கொண்டு வந்து தருவார்.
1988 இல் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினரானார். அவரைப் போல உண்மையும் நேர்மையும் செயல்வேகமும் நிறைந்த ஒரு மக்கள் பிரதிநிதியை, இன்றுவரை நான் காணவில்லை. அதன் பின் அவரது முழு வாழ்க்கையுமே பொதுநல வாழ்க்கை என்றாகி விட்டது. எங்கள் ஊரில் எல்லோரினதும் ஆதர்சமாக மிளிர்ந்தார். பொது வாழ்க்கையில் அவரே எனக்கு முன்னுதாரணமும் ஆனார்.
ஆட்கடத்தல்கள், மின் கம்பக் கொலை, கப்பம், கொள்ளை, கண்ணிவெடிகள், படுகொலைகள் மலிந்திருந்த காலம் அது. அச்சம் நிறைந்த அந்தக் காலத்தில் அலி உதுமான் சேர், மிகுந்த துணிவோடு ஓய்வொழிச்சல் இன்றி இயங்கினார். பொலிஸ், இராணுவம், விசேட அதிரடிப் படை, இந்திய இராணுவம், தமிழ் இயக்கங்கள் என்று பல தரப்பினரது அலுவலகங்களில் ஏறி இறங்குவது, அப்போது ஒரு மக்கள் பிரதிநிதியின் தவிர்க்க இயலாத பணியாக இருந்தது.
எப்போதும் துவிச்சக்கர வண்டியில்தான் பயணிப்பார். அவர் சைக்கிள் மிதித்துச் செல்லும் காட்சி இப்போதும் கண் முன்னே தெரிகிறது. எந்த பந்தாவும் இல்லாத மிக எளிமையான மனிதர். 'முறிந்த பனை' ராஜனி திரணகமவின் நினைவுகளோடு, அலி உதுமான் சேரின் நினைவுகளையும் இப்போது மனம் ஒப்பிட்டுப் பார்க்கிறது. அதற்கு அந்த சைக்கிள் மட்டும் காரணம் அல்ல; அந்தத் துணிவு, சமரசமற்ற பொதுநல உணர்வு, ஒப்பற்ற தியாகம், மரணத்தைக் கூட துச்சமென மதித்த அந்தப் பண்பு - இப்படிப் பல.
ஒருநாள் ஊரிலிருந்த ENDLF அலுவலகத்தில், அவருக்கும் அங்கிருந்த ஆயுததாரிகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு விட்டது. வெளியே வந்ததும் அவரது சைக்கிளின் காற்றைத் திறந்து விட்டிருந்தனர். சைக்கிளைத் தள்ளியபடியே வீட்டுக்கு வந்தார். அதுதான் அலி உதுமான் சேர். அவருடைய டயறியில் "Seelan's boys threatened me on the T.Phone" (சீலனின் பொடியன்கள் என்னை தொலைபேசியில் அச்சுறுத்தினர்) என்று எழுதியிருந்தார்.
1989 ஓகஸ்ட் முதலாம் திகதி. அப்போது நான் ஓ.எல். படித்துக் கொண்டிருந்த காலம். அன்று பாறுக் சேரின் ஆங்கில ரியூசன் வகுப்புக்குப் போயிருந்தோம். அப்போது கள்ளன் கலீல் என்ற பெயர் ஊரில் மிகவும் பிரசித்தம். ஊரறிந்த ஒரு கள்வன் திடீரென ENDLF போராளியாக மாறினான். ஊரில் கலீல் என்றால் எல்லோருக்கும் கடும் பயம். அந்தக் கலீலை, பட்டப்பகலில் ஊரின் உள்தெருவொன்றில் வைத்து (ஆயிஷா மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாக, Engineer நஸீர் Uncle இன் வீட்டுக்கு முன்னே) புலிகள் சுட்டுக் கொன்றனர். கலீலின் உடல் குருதி வழிந்தவாறு அப்படியே கிடந்தது.
வகுப்பிலிருந்து ஓடிப் போய் இறந்து கிடந்த கலீலின் சடலத்தைப் பார்த்து விட்டு வந்தோம். ஊரெங்கும் கடும் ரென்ஷனாக இருந்தது. ENDLF இனர் எந்நேரமும் வந்து விடலாம் என்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று ஒரே பதற்றம். எதிர்பார்த்தது போலவே, சில மணி நேரத்துக்குள் வானை நோக்கிச் சுட்ட வண்ணம் அவர்கள் வந்தார்கள்.
இந்தச் சம்பவங்கள் எல்லாமே எங்களது வீட்டுக்கு அண்மையில்தான் நிகழ்ந்து கொண்டிருந்தன. அப்போது மாலை வேளை. அஸர் தொழுது விட்டு பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எனக்கு, சில அடிகளே இருந்த வீட்டுக்குச் செல்ல முடியவில்லை. துப்பாக்கி சுமந்த ஆயுததாரிகள் இருந்ததால், A.O வின் தெருவுக்குள் நாங்கள் நாலைந்து பேர் ஒதுங்கி ஒளிந்து நின்று, என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டிருந்தோம்.
அலி உதுமான் சேரின் வீட்டுப் பொதுமதில் அருகேதான் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். அப்போது அம்பாரைக்கு ஏதோ ஒரு அலுவலாகச் சென்றிருந்த அலி உதுமான் சேர், மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். வண்டியை காசிம் என்ற மு.கா. பிரதேச சபை உறுப்பினர்தான் ஓட்டி வந்தார். அலி உதுமான் சேர் பின் சீற்றில் இருந்துதான் இறங்கினார்.
வந்திறங்கி எங்களிடம்தான் கேட்டார்: "என்ன நடக்கிறது இங்கே?" "கலீலைச் சுட்டு விட்டார்கள்" என்றோம். அப்படியா என்று கேட்டு விட்டு வீட்டுக்குள் போனார். வீட்டில் யாரும் இருக்கவில்லை. வீடு பூட்டியிருந்ததால் திரும்பவும் வீதிக்கு வந்திருக்கிறார். அப்போது காழியாரின் சந்தியிலிருந்து ஒருவன் துப்பாக்கியை நீட்டிக் குறி பார்த்தான். அதை என் கண்களால் பார்த்தேன். அந்தக் குண்டுதான் அலி உதுமான் சேரின் உயிரைக் குடிக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
இதற்கு மேல் எழுத முடியவில்லை.
Post a Comment