காதி நீதிமன்றத்தை இல்லாமலாக்குதல், பலதார திருமண தடை தீர்மானங்களை மீள்பரிசீலனை செய்யுமாறு நீதியமைச்சரிடம் கோரிக்கை
அமைச்சரவை மேற்கொண்டுள்ள திருத்தங்கள் இன்னும் சட்டமாக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதியமைச்சரை நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்கள். கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அர்கம் நூராமித், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் என்.எம்.அமீன், வை.எம்.எம்.ஏ அமைப்பின் தலைவர் எம்.எஸ்.எம்.ரிஸ்மி, தேசிய சூரா சபையின் தலைவர் அசூர் மற்றும் பெண் பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கு கொண்டிருந்தனர்.
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள திருத்தங்களில் திருமண வயதெல்லை அதிகரிப்பு மற்றும் திருமணப்பதிவின் போது மணமகளின் கையொப்பம் பெற்றுக் கொள்ளல் என்பனவற்றுக்கு ஆதரவு தெரிவித்த முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகள், காதி நீதிமன்ற முறைமையை இல்லாமற் செய்வது தொடர்பான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யும்படியும் நீதியமைச்சரை வேண்டிக் கொண்டார்கள்.
காதி நீதிமன்ற முறைமை இல்லாமலாக்கப்பட்டு முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் குடும்ப நீதிமன்றில் அல்லது வேறு நீதிமன்றமொன்றில் அமுல்படுத்தப்பட்டால் முஸ்லிம்கள் எதிர்நோக்க வேண்டியேற்படும் பிரச்சினைகளை அமைப்புகளின் பிரதிநிதிகள் நீதியமைச்சரிடம் விளக்கினார்கள்.
பலதார திருமணத்துக்கான தடை தொடர்பிலும் மீள் பரிசீலனை செய்யுமாறு வேண்டிக்கொண்டார்கள்.
முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துகளை உள்வாங்கிக் கொண்ட நீதியமைச்சர் அவற்றை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டுவருவதாகத் தெரிவித்தார். -Vidivelli
Post a Comment