Header Ads



எதிர்க்கட்சித் தலைவர் வெளியிட்ட ஊடக அறிக்கை


கொத்தலாவல பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து.

கொத்தலாவல பாதுகாப்பு அறிவியல் பீடம் 1981 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கேடட் அதிகாரிகளுக்கான பயிற்சி மையமாகவும், இலங்கையில் உயர் கல்வி கற்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை தற்போதுள்ள விதத்தில் பராமரிப்பதற்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு இன்னும் நவீன மற்றும் விஞ்ஞான பயிற்சிகளை வழங்குவதற்கும் தேவையான அந்த முடிவுக்கு எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்கும் நாங்கள் முழு மனதுடன் ஒப்புதல் அளிக்கிறோம்.

இருப்பினும், முன்மொழியப்பட்ட கொதலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் மூலம்,

⏺1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தை மீறி உயர்கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள்  ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டு மற்றும் தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு வெளியே முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தை நிறுவ முயற்சித்தல்,

⏺பல்பக்க அறிவுச் செல்வத்தைக் கொண்ட குழுக்கள் மற்றும் துறை சார் குழுக்களைக் கொண்டவர்களால், முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்திற்குள் முடிவெடுக்கும் மற்றும் கல்வி கட்டமைப்பை நிறுவுவதில் உள்ள தோல்வி,

⏺பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், டீன் மற்றும் பிற அதிகாரிகளை நியமித்தல் மற்றும் பல்கலைக்கழகத்தின் பாடவிதானம்,கற்கைகள் குறித்த முடிவெடுக்கும் அதிகாரத்தை பல்கலைக்கழகத்திலிருந்து அகற்றி அதை ஒரு மேலாதிக்க கட்டமைப்பிற்குள் உட்படுத்துதல்,

⏺முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்தில் கற்கைகளின் தரத்தை மதிப்பிடுவதற்கும் பராமரிப்பதற்கும் முறையான தரப்படுத்தல் முறை மற்றும் கட்டமைப்பு முறை இல்லாதது,

⏺முன்மொழியப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு பிற பிராந்திய பாடசாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கு பட்டங்களை வழங்குவதற்கான அதிகாரத்தை வழங்குதல்,

போன்ற உண்மைகளின் அடிப்படையில் இந்த சட்டமூலத்திற்கு எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

முன்மொழியப்பட்ட சட்டம் இலவச கல்வி கட்டமைப்பிற்கும் இந்த நாட்டில் அதன் இருப்புக்கும் ஒரு மோசமான பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.  எனவே, உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை உடனடியாக திரும்பப் பெறுமாறு ஜனாதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.

ஜூலை 16 ம் திகதி பௌத்த ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய ஜனாதிபதி, 1978 ஆம் ஆண்டு 16 ஆம் திகதி பல்கலைக்கழகச் சட்டத்தின் சில பகுதிகள் திருத்தப்பட்டு அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். இதுபோன்ற மக்கள் விரோத நோக்கங்களை அடைய பல்கலைக்கழக சட்டத்தைத் தொடக்கூடாது என்றும், பல தசாப்தங்களாக மக்கள் அனுபவித்து வரும் இலவசக் கல்வியின் சலுகையை குறைக்கக் கூடாது என்றும் ஜனாதிபதியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.  முறையான கலந்துரையாடலும் ஒருமித்த கருத்தும் இல்லாமல் பல்கலைக்கழகச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவது இந்த நாட்டில் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில் கடுமையான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்பதை ஒரு பொறுப்பான எதிர்க்கட்சியாக நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்.

அரசாங்கம் தன்னிச்சையாக பல்கலைக்கழகச் சட்டத்தைத் திருத்துத்துமாக இருந்தால் அல்லது முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், அறிவார்ந்த மகா சங்கம், பல்கலைக்கழக சமூகம், சிவில் சமூக அமைப்புகள், பிற அரசியல் கட்சிகள் மற்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் ஒன்றிணைத்து  அரசாங்கத்தின் முயற்சியைத் தோற்கடிக்க ஐக்கி மக்கள் சக்தி உறுதியாக இருக்கிறது என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சஜித் பிரேமதாச

எதிர்க்கட்சித் தலைவர்

No comments

Powered by Blogger.