அமைச்சர்களின் தொகுதிகளில் மாத்திரம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது - ஹலீம்
அக்குறணை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துவெளியிடும்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் திலக் ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இக்குழுக் கூட்டத்தில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாமுதீன், அக்குறணை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஹலீம் எம்.பி. மேலும் கருத்து வெளியிடுகையில், கொரோனா இலங்கை நாட்டை பல்வேறு வகையிலும் வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. மக்கள் பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கையில் இந்த அரசாங்கம் அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறது.
கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கண்டி மாவட்டத்தில் அரசியல் ரீதியிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. குறிப்பாக இம்மாவட்டத்தில் அமைச்சர்களின் தொகுதிகளில் மாத்திரம் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான மஹிந்தானந்த, கெஹலிய, திலும், லொஹான் போன்றோரின் தொகுதிகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். ஆனால், ஹாரிஸ்பத்துவ, யடிநுவர, உடுநுவர, ஹேவாஹெட்ட போன்ற தொகுதிகளில் இதுவரையில் தடுப்பூசிகள் வழங்கப்படவில்லை. இவ்வாறு அரசியல் ரீதியில் செயற்படாது இந்த அரசாங்கம் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
அத்தோடு, பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சூழலில் 5000 ரூபா நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும் அவை முறையாக பகிர்ந்தளிக்கப்படவில்லை. மக்களின் தேவையை அரசாங்கம் உணர்ந்துகொள்வதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் விலைவாசிகள் உயர்வடைவதால் மக்கள் பட்டினியில் வாடும் நிலையே இன்று உருவாகியிருக்கின்றது. கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் இந்த மக்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக விலைவாசிகளை உயர்த்தி மேலும் சுமையையே கொடுக்கின்றது. இது மரத்திலிருந்து விழுந்தவனை மாடு முட்டிய கதைக்கு ஒப்பானதாகும்.
மேலும், சமுர்த்தி பயனாளிகள் பலருக்கு கொடுக்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளது. ஒழுங்கான முறையில் அவர்களுக்கான சமுர்த்தி தொகையும் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் இங்கு சுட்டிக்காட்டினார்.
Post a Comment