நீண்ட இடைவெளிக்கு பின் இலங்கை அணிக்கு வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 03 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய இந்திய அணி 23 ஓவர்கள் நிறைவில் 147 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. பின்னர் வானிலை சீரடைந்ததையடுத்து,47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டு போட்டி மீள ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து துடுப்பாடிய இந்திய அணி 43.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 225 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்திய அணி சார்பில் பிரித்வி ஷா 49 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் பிரவீன் ஜயவிக்ரம மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்நிலையில் இலங்கை அணிக்கு 227 ஓட்டங்கள் (டக்வத் லூயிஸ் முறையில்) வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை அணி 39 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் அவிஷ்க பெர்னாண்டோ 76 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ராகுல் சஹர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்படி இரண்டு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியது.
Post a Comment