Header Ads



அனைவரும் ஒன்றிணைந்தால் நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை - பிரதமர் மஹிந்த


கொவிட் தொற்றை காரணம் காட்டி நாம் இல்லை, முடியாது என்றிருந்தால் மக்கள் இதனைவிட பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (02) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

445 மில்லியன் ரூபாய் மற்றும் 127 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கபுதுவ பரிமாற்ற நுழைவாயில் மற்றும் பேராதனை போதனா வைத்தியசாலையின் முன்னால் சுரங்க வழி பாதசாரிகள் கடவை ஆகியவற்றை திறந்து வைத்த கௌரவ பிரதமர், 4999 மில்லியன் ரூபாய் செலவில் கோட்டை லோட்டஸ் வீதியில் 17 மாடிகளை கொண்டதாக நிர்மாணிக்கப்படும் 'கடல்சார் வசதி மையத்தின்' நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துவைத்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

கபுதுவ பரிமாற்றத்தின் நிர்மாணப் பணிகள் 5 மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் நிறைவுசெய்யப்பட்டமை விசேடம்சமாகும். பேராதனை சுரங்க வழி பாதாசாரிகள் கடவை 12 மாதங்களில் நிறைவுசெய்யப்பட்டது. இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட கடல்சார் வசதி நிலையத்தை 24 மாதக் காலப்பகுதிக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

நாம் நாட்டின் அபிவிருத்தி குறித்து கதைக்கும்போது அந்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சாலை அமைப்பு குறித்து விசேட கவனம் செலுத்துவோம். 

அதேபோன்று உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டுமாயின் நிச்சயமாக நாட்டின் சாலை அமைப்பை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் வசதியை அனுபவிக்கும் மக்கள் அதனை நன்கு அறிவார்கள். அன்று கஷ்டமான பிரதேசங்கள் என கைவிடப்பட்ட எத்தனை கிராமங்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பின் ஊடாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன? அந்த மக்கள் இன்று வைத்தியசாலைக்கு செல்வது, தமது அறுவடைகளை விற்பனை செய்வது, நகருடன் தொடர்புபடுவது அனைத்தும் இந்த அதிவேக நெடுஞ்சாலை ஊடாகவாகும். 

அதுமாத்திரமன்றி பல தசாப்தங்கள் காணாத அபிவிருத்தியை கிராமத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு மார்க்கமாக மக்கள் இந்த அதிவேக நெடுஞ்சாலை அமைப்பை காண்கின்றனர்.

இன்று மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கபுதுவ பரிமாற்றம் ஆரம்ப திட்டத்தில் காணப்படவில்லை. அம்மக்கள் தொடர்ந்து பரிமாற்ற நுழைவாயில் கோருவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர் லன்சாவுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்து என்னிடம்; தெரிவித்தார்.

அதனால் இது தொடர்பில் ஆராய்ந்து அப்பிரதேச மக்களின் தேவையை நிறைவேற்றுமாறு தெரிவித்தோம். எவ்வித சொத்து கையகப்படுத்தலையும்; மேற்கொள்ளாது இன்று அம்மக்களின் எதிர்பார்ப்பை ஐந்து மாதங்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் நிறைவேற்ற எமக்கு முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம்.

அதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தற்போது கபுதுவவிலிருந்து மாத்தறை நகருக்கு 7 கிலோமீற்றர் தூரமாகும். இங்கிருந்து கும்புறுபிட்டிய நகருக்கு இடையே 10 கிலோமீற்றர் தூரம் காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி இப்பிரதேசங்களில் வாழும் விவசாய சமூகத்திற்கு இது பெரும் உதவியாக அமையும்.

நாட்டின் அபிவிருத்திக்காக மக்களுக்கு முறையான சாலை அமைப்பை ஏற்படுத்தி கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதிவேக நெடுஞ்சாலை மாத்திரமன்றி நாட்டின் பிற கிராம வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நாம் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதி நிர்மாணப் பணிகள் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து செயற்படுத்தி வருகின்றோம்.

கொழும்பு நகரில் காணப்படும் வாகன நெரிசலுக்கு தீர்வு வழங்கும் வகையில் நாம் அண்மையில் தூண்களின் மேல் அமைக்கப்படும் நெடுஞ்சாலை திட்டமொன்றை ஆரம்பித்தோம். தற்போது அதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கொழும்பில் அதிக வாகன நெரிசல் காணப்படும் இடங்களை இனங்கண்டு அங்கு மேம்பாலங்களை நிறுவ நடவடிக்கை மேற்கொண்டோம்.

கொழும்பில் மாத்திரமல்ல கண்டியிலும் வாகன நெரிசல் அதிகம். அதற்கு தீர்வு காண நாம் பல திட்டங்களை ஆரம்பித்தோம். அண்மையில் கெட்ம்பே சந்திக்கு மேம்பாலமொன்றை அமைத்தோம்.

இந்த மேம்பாலத்தின் மூலம் மாத்திரம் பேராதனை வாகன நெரிசலுக்கு தீர்வு காண முடியாது என்பதால் சீன எக்சிம் வங்கி நிதியுதவியின் கீழ் பேராதனை போதனா வைத்தியசாலையின் முன்னால் சுரங்க வழி பாதசாரிகள் கடவையொன்றை அமைத்தோம்.

இது பாதசாரிகளுக்கு பாதுகாப்பாக அமைவதுடன் பேராதனை வைத்தியசாலை, கெடம்பே விகாரை, அறநெறி பாடசாலை, பல்கலைக்கழகம், வங்கி மற்றும் அங்குள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செல்வோருக்கும் வசதியாக அமையும்.

சுரங்கவழி பாதசாரி கடவை நிர்மாணத்தின் போது வீதியோர விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்களுக்காக சுரங்க பாதையில் விற்பனை நிலையங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் அவர்கள் குறிப்பிட்டார்.

எமது இந்த அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பல்வேறு விமர்சனங்களை மேற்கொள்கின்றன. கொவிட் பிரச்சினை முடியும் வரை இந்த அபிவிருத்திகளை செய்யாதிருக்குமாறு சிலர் கூறுகின்றனர். வீதிகளை நிர்மாணிக்க வேண்டாம் என்கின்றனர்.

கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாம் இதுவரை 262 பில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளோம். நம் நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவே அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்தோம். அவர்களது வாழ்க்கையின் முக்கியத்துவம் அறிந்;ததால் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். அதனை நாம் நிறுத்த மாட்டோம்.

கொவிட் தொற்றை காரணம் காட்டி நாம் இல்லை, முடியாது என்றிருந்தால் மக்கள் இதனைவிட பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும். நாம் எமது மக்களை பாதுகாத்துக் கொள்வோம். அதற்கான பலத்தை நீங்கள் எமக்கு அளிக்க வேண்டும். தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறும் அதேவேளை உங்கள் பலத்தை நாட்டிற்கு வழங்குங்கள். அனைவரும் ஒன்றிணைந்தால் நம்மால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. 

இன்று மக்கள் மயப்படுத்தப்பட்ட இத்திட்டம் போலவே, கொழும்பு துறைமுகத்தில் இன்று நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்க 17 மாடிகளை கொண்ட 'கடல்சார் வசதி மையம்' இலங்கை துறைமுக அதிகாரசபையின் நடவடிக்கைகளை மேலும் சீராக்க உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஒன்லைன் முறையை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படும் இந்த மையத்திற்கு இலங்கை துறைமுக அதிகாரசபையின் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்படும் போது, அதன் செயல்திறனும் உற்பத்தித்திறனும் அதிகரிக்கும். அந்த நிறுவனங்களுடன் கொடுக்கல்வாங்கல் மேற்கொள்ளும் அனைவருக்கும் இது மிகவும் பயனளிக்கும்.

எனவே, இப்பணியை ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து விரைவாக நிறைவுசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை துறைமுக ஆணைக்குழுவிற்கு பலம் மற்றும் தைரியம் கிடைக்க பிரார்த்திக்கின்றேன் எனத் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.