கல்வியை முறையாக வழங்கமுடியாவிடின், அது கொரோனா மரணத்துக்கு சமனானது - இராஜாங்க அமைச்சர்
வரப்பிரசாதங்களுக்கும் சில வசதிகளுக்காகவும் மக்களை பணயம் வைத்து, அவர்களின் உயிரைக் கருத்திற்கொள்ளாமல் ஆர்ப்பாட்டங்களை சிலர் நடத்துகின்றனர் எனத் தெரிவித்த பெண்கள் மற்றும் சிறுவர் மேம்பாடு, பாலர் பள்ளிகள் மற்றும் ஆரம்பக்கல்வி பாடசாலைகள் உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, நாட்டில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது ஜனநாயக உரிமை. கட்சிகளுக்கும் இந்த உரிமையுள்ளது.
எனினும், அவர்கள் யாருக்காக இதனை செய்கிறார்கள் என்பதே முக்கியம் என்றார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதற்கே சிலர், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எனவே, பிள்ளைகளின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என, தொழில்சார் ஆசிரியராகவும் தந்தையாகவும் அமைச்சராகவும் கோரிக்கை விடுகின்றேன் என்றார்.
ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பவர்கள் அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக மாறக்கூடாதென வேண்டுகோள் விடுத்த அவர், கொரோனா தொற்றால் பிள்ளைகளுக்கான கல்வியை உரிய முறையில் வழங்க முடியாதவகையில், நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
கல்வியை முறையாக வழங்கமுடியாவிடின் அது கொரோனா மரணத்துக்கு சமனானது என்றார். “ஆகையால், பிள்ளைகளை நினைத்தாவது சில தீர்மானங்களை உரிய தரப்பினர் முன்னெடுக்க வேண்டும்” என்றார்.
இதேவேளை பாடசாலைகள் திறக்கப்படும் சரியான திகதி குறித்து அறிவிக்க முடியுமா என
எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அனைத்து ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய பின்னர்,விசேட கலந்துரையாடலை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்த அவர், அடுத்த ஒன்றரை மாதத்துக்குள் பாடசாலைகளைத் திறக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
“கொரோனா நெருக்கடி என கூறி பாடசாலைகளை தொடர்ந்து மூடி வைத்து, மாணவர்களின்
கல்வி மற்றும் வாழ்க்கையுடன் விளையாட முடியாது. எனவே ,மாணவர்கள் இழந்த கல்வி
சந்தர்ப்பத்தை மீண்டும் திட்டமிட்டபடி வழங்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
Post a Comment