பலத்த பாதுகாப்புடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹிஜாஸ், இது சோடிக்கப்பட்ட வழக்கு என ஊடகங்களைப் பார்த்து தெரிவிப்பு
கொழும்பு மெகசின் சிறையிலிருந்து சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும், மௌலவி சலீம்கான் முஹம்மட் சகீல் மஹர சிறையிலிருந்தும் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் புத்தளம் மேல்நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை உடனடியாக நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்தி, அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகையை கையளித்து வழக்கு விசாரணையை முன்னெடுக்குமாறு நகர்த்தல் பத்திரம் ஊடாக அவரது சார்பில் சட்டத்தரணிகள் கோரியிருந்தனர்.
இந்த நிலையிலேயே குறித்த வழக்கு புத்தளம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய நேற்று (15) குறித்த இருவரும் புத்தளம் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரிக்கவென விஷேடமாக நியமிக்கப்பட்டுள்ள சிலாபம் மேல் நீதிமன்றின் நீதிபதி குமாரி அபேரத்ன, புத்தளம் மேல் நீதிமன்றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்னிலையிலேயே இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், புத்தளம் அல் சுஹைரியா மத்ரஸா பாடசாலையின் அதிபர் மௌலவி சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகியோரே இவ்வழக்கின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவ்விருவருக்கும் எதிராக ஐந்து குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அத்துடன் நேற்றைய தினம் (15) குறித்த இரண்டு பிரதிவாதிகளிடமும் குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டன.
குறித்த குற்றப்பத்திரிகையில் குறைபாடுகள் காணப்படும் பட்சத்தில் அதனை அடுத்த வழக்கு தவணையில் திருத்தலாம் என நீதிவான் அறிவித்துள்ளார்.
அத்தோடு, கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் இரு சிறுவர்கள் வழங்கிய இரகசிய வாக்குமூலங்கள் இதுவரை புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு கிடைக்கவில்லை எனவும், அதனை புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு கையளிக்குமாறும் கொழும்பு கோட்டை நீதிவானுக்கு, சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, இதன்போது உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்
இதேவேளை, ´இது சோடிக்கப்பட்ட வழக்கு´ என கொழும்பு மெகசின் சிறைச்சாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக புத்தளம் மேல் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலை அதிகாரிகளால் அழைத்துவரப்பட்ட போது சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ஊடகங்களைப் பார்த்து கூறினார்.
-புத்தளம் நிருபர் ரஸ்மின்-
God bless Son!
ReplyDelete