குர்பான் அனுமதியை குழப்பத் திட்டமா..? கொழும்பில் சிக்கலான நிலைமை..! பிரதமரின் கவனத்திற்கு கொண்டுசெல்லத் திட்டம்
- AAM. Anzir -
மாடறுப்பை தடை செய்யவதற்கான அனுமதியை அமைச்சரவை அங்கீகரித்துள்ள நிலையில், இந்தமுறை (2021) குர்பான் கொடுப்பதில் சிக்கல்கள் நிலவலாமென கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கொழும்பு மாநகர சபை எல்லைக்குள், குர்பான் கொடுப்பதற்கான அனுமதியை மேயர் ரோசி சேனநாயக்கா வழங்கியிருந்தார். எனினும் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் செயலாளர், கொழும்பு மாநகர எல்லைக்குள் மாடறுக்க அனுமதிக்க வேண்டாமென கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.
இதனால் முஸ்லிம் வட்டாரங்களிடையே, ஒரு குழப்ப நிலை உருவாகியுள்ளது.
இதுதொடர்பில் உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் செயலாளருடன், தொலைபேசியில் தொடர்புகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் மாடறுப்பை தடைசெய்ய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறதே தவிர, பாராளுமன்றத்தின் மூலமாக அதற்கான சட்டம் இயற்றப்படவில்லை. எனவே எக்காரணம் கொண்டும் குர்பான் கொடுப்பதை மாகாண சபைகள் அமைச்சு தடை விதிக்கக்கூடாதென வாதிட்டுள்ளார். இதுதொடர்பில் இருவருக்கும் இடையே நடந்த கடுமையான தொலைபேசி உரையாடலின் ஓடியோவும் Jaffna Muslim இணையத்திற்கு கிடைக்கப்பெற்றது.
இதையடுத்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், கொழும்பு மாநகர சபை மேயர் ரோசிக்கு இதுகுறித்து விளக்கியுள்ளார். அதில் மாடறுப்பை தடைசெய்யவோ அல்லது குர்பான் அனுமதியை ரத்துச் செய்யவோ கூடாதெனவும் அமைச்சரவையின் தீர்மானம் நாட்டின் சட்டமல்ல எனவும் சட்டமியற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும், இவ்விவகாரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. குர்பான் விவகாரத்தை சுமூகமாக நிறைவேற்ற அவர்கள், பிரதமர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கவனத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகிறது.
Post a Comment