அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூபின் வெற்றிடங்கள் உணரப்படுகிறது, முஜிபுர் ரஹ்மானுக்கு றிசாத் மீது அக்கறை
எரிபொருள் விலை ஏற்றத்தின் போது நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து உதய கம்மன்பிலவை காப்பாற்றுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பீக்கள் காட்டிய முன்னெடுப்பானது, இன்று தலைவர் றிசாட் பதியுதீனை அவர் சார்ந்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவும் கைவிடும் நிலையை தோற்றியுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பீ .எம். ஷிபான் தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், உதய கம்மன்பிலவை காப்பாற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் எம்.பீக்களான இவர்கள் எடுத்த முன்னெடுப்பினை பாராளுமன்றில் தமக்கிருந்த சிறப்புரிமையை முன்வைத்துப் பேசி தலைவர் றிசாத் பதியுதீனையும் அவர் குடும்பத்தையும் காப்பாற்றுவதில் காட்டவில்லை.கடந்த நல்லாட்சி அரசில் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் பிரதியமைச்சர்களாகவுமிருந்த அமீர் அலி, அப்துல்லா மஹ்ரூபின் வெற்றிடங்கள் தற்போதுதான் கட்சிப்போராளிகளினால் உணரப்படுகிறது.
கடந்த பாராளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதலை மையமாகவைத்து முஸ்லிம்களையும், அகில இலங்கை மங்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீனையும் விசமிகள் குறிவைத்து தாக்கிய போதெல்லாம் பக்கபலமாகவும், எந்தவிதமான ஐயப்பாடுகளுமின்றி தலைவருக்குத் துணையாகவும் இணையாகவும் நின்று போராடியவர்கள் முன்னாள் எம்.பீக்களான அமீர் அலியும், அப்துல்லா மஹ்ரூப் அவர்களுமாவர்.
இன்றைய நாட்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மானுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் மீது இருக்கின்ற அக்கறையைக்கூட அவரின் நாமத்தை மையமாகவைத்து அரசியல் செய்து எம்.பீக்களான இவர்களிடம் காணமுடியாமலுள்ளது. ஆகவேதான் போராட வக்கற்ற புழுக்களை பாராளுமன்றம் அனுப்பி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சோதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. அறிவார்ந்து அரசியல் செய்கின்றோம் என மக்களைக்குழப்பி எதிர்கட்சியில் இருந்து ஆளும்கட்சியிடம் சலுகைளுக்கும், தங்களுடைய பணப் பைகளை நிரப்பிக் கொள்வதற்காக, வீதி கொந்தராத்துக்களையும், ஜப்பான் வீசாக்களையும், பிரதி, ராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் கனவு காணும் இவர்கள், இன்று தலைவர் றிசாட் பதியுதீன் தொடர்பில் கரிசனை இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியில் தோப்பாக இருந்த தலைவரை தனிமையில் ஆக்கிவிட்டனர். இது தொடர்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் என்ற ரீதியில் வெட்கம் அடைகின்றேன் என்றார்.
நூருல் ஹுதா உமர்
சட்டத்தின் முன் அனைவரும் சமன்.
ReplyDeleteகுற்றவாளிகளை காப்பாற்ற முனையும் இவர்களையும் கைது செய்ய சட்டத்தில் இடமுண்டு