Header Ads



200 ஏக்கர் நிலப்பரப்பில் தடுப்புக்காவல், சீர்த்திருத்த நிலையத்தை அமைக்கிறது இலங்கை - ஜனாதிபதி நேரில் சென்று பார்வை


பொரளையில் உள்ள சிறைச்சாலைக் கட்டிடத்  தொகுதியை மீளமைக்க முன்மொழியப்பட்டுள்ள ஹொரண - மில்லேவ தோட்டத்துக்குச் சொந்தமான காணியை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள், இன்று (09) பார்வையிட்டார்.

சிதைவடைந்த பழைய கட்டிடங்கள், அதிக நெரிசல் மற்றும் வேறு வெளிப்புறக் காரணிகளால், குறித்த சிறைச்சாலையை வேறு ஓர் இடத்துக்கு இடமாற்றம் செய்யவேண்டிய தேவை, நீண்ட காலமாக இருந்து வருகிறது.

சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதி மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த வீடியோ விளக்கக் காட்சியொன்று முன்வைக்கப்பட்டதுடன், சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக் கைதிகள் புனர்வாழ்வு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, இது பற்றி ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கினார்.

புதிய சிறைச்சாலைக் கட்டிடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ஹொரண - மில்லேவ தோட்டத்திலுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, புதிய மெகசின் சிறைச்சாலை, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை, சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவு மற்றும் சமுதாயச் சீர்திருத்தத் திணைக்களம் ஆகியவை, இந்த உத்தேச வளாகத்துக்குள் நிர்மாணிக்கப்பட உள்ளன. 'சிபிரி சுவசெத் உதான' “மில்லேவ தடுப்புக்காவல் மற்றும் சீர்த்திருத்த மத்திய நிலையம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்துக்காக, திறைசேரியின் மூலம் நிதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்மொழியப்பட்டுள்ள சிறைச்சாலைத் திட்டத்தில், சிறைக் கைதிகளின் நலன் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, சிறைச்சாலைக் கட்டிடத்தொகுதி, சிறைச்சாலை வைத்தியசாலை, பயிற்சிப் பாடசாலை மற்றும் புலனாய்வுத்துறை ஆகியவற்றை நிர்மாணிப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள இடங்களை, ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

இதன்போது, ஜனாதிபதி அவர்கள் அத்தோட்டத்தில் வசிப்பவர்களைச் சந்தித்து, அவர்களது விவரங்களைக் கேட்டறிந்தார். நிர்மாணப் பணிகள் காரணமாக அவர்கள் இழக்க நேரிடும் சொத்துக்களுக்கான இழப்பீடு மற்றும் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்

அமைச்சர்களான அலி சப்ரி, ரோஹித அபேகுணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, ஜயந்த சமரவீர, பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான சஞ்சீவ எதிரிமான்ன, அனூப பெஸ்குவல், லலித் எல்லாவல, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு - 2021.07.09


2 comments:

  1. BORELLA ஷிறைஷாலை இருக்கும் இடம்
    பல ஆயிரம் கொடி றூபஐகல் பெறுமதிஅன ஷொத்து.

    ReplyDelete
  2. சிறைச்சாலை அமைக்கும் பணிகளுக்கு சீனா 100க்கு நூறு பணஉதவியளித்து அத்திட்டங்களை நிறைவு செய்யும்.ஏனெனில் அது எதிர்கால சீனாவின் திட்டங்களுக்கு மிகவும் அவசியமான ஒரு தேவை.அதனால்தான் பாராளுமன்றத்தில் பணம் ஒதுக்கப்படாத போதிலும் அதனைத் தானாகவே சென்று பார்த்து அதற்குரிய கமிஷனுக்குப் பிறகு அந்த பணிகளை ஆரம்பித்து வைத்தால் பெரிய தெய்வம் மகிழ்ச்சியடையும்.

    ReplyDelete

Powered by Blogger.