குர்ஆனை மனனம் செய்த, உலகின் முதல் ‘டவுன் சின்ட்ரம்’ சிறுமி றவ்வான் அல் துவைக்
டவுன் சின்ட்ரம் என்பது ஒரு பிள்ளை அதன் மரபணுவின் (டி.என்.ஏ) 21 வது குரோமோசோமின் கூடுதல் நகலுடன் பிறக்கின்ற நிலைமை ஆகும். இந்த பாதிப்பு நிலைமை ட்ரிசோமி 21 என்றும் அழைக்கப்படுகின்றது. இது உடல் மற்றும் மன வளர்ச்சி மேம்படுவதில் தாமதங்களை ஏற்படுத்துவதுடன் குறித்த விடயங்களில் குறைபாடுகளையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலைமையே ஆங்கிலத்தில டவுன் சின்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த குறைபாட்டினாலேயே றவ்வான் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஆறு பிள்ளைகள் உள்ள குடும்பத்தில் றவ்வான் கடைசிப் பிள்ளை ஆவார். தந்தையை இழந்துள்ள றவ்வானுக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரரும் இருக்கிறார்கள். குர்ஆன் வசனங்களை எழுதுவதன் ஊடாக அவர் முழுக்குர்ஆனையும் மனனம் செய்துள்ளார். தனது மகளுக்கு சிறந்த முறையில் உச்சரிப்புத் திறன் இருப்பதன் ஊடாக இறைவன் தனது மகளை ஆசிர்வதித்துள்ளதாக றவ்வானின் தாயான அவாதெப் ஜபர் தெரிவிக்கிறார். றவ்வான் மிகுந்த விருப்பத்துடன் குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ளதாக அவரது தாயார் தெரிவிக்கிறார்.
றவ்வானின் இந்த சாதனை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் அவாதெப் ஜபர் “றவ்வான் பிறந்தபோது அவர் இவ்வாறான நோய்க்குறியால் அவதிப்படுகிறார் என்பதை அறிந்தபோது எந்தவொரு தாயையும் போல நானும் சோகமாகவும் வருத்தமாகவும் உணர்ந்தேன். ஆனால் நான் றவ்வானை மிகவும் நேசித்தேன். குர்ஆனைப் படிக்க நான் அவளுக்குக் கற்பிப்பேன் என்று இறைவனிடம் சத்தியம் செய்தேன். அதை மனப்பாடம் செய்யவே இறைவன் எழுதியிருக்கிறான். அதைப் பாதுகாப்பதன் மூலம் றவ்வான் என்னை கௌரவித்துள்ளார்” என தெரிவிக்கிறார்.
“றவ்வான் மிகவும் புத்திசாலி, அவருடைய புத்திசாலித்தனத்தையும் நுண்ணறிவையும் கண்டறிந்தபோது மிகச் சிறிய சூராக்களை அவருக்குக் கற்பிக்கத் தொடங்கினேன். அவர் மிக விரைவாக மனப்பாடம் செய்தார்” என தாயார் அவாதெப் ஜபர் தெரிவிக்கிறார். இந்நிலையில் றவ்வான் ஆறு வயதை அடையும்போது பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அவர் பாடசாலைக் கல்வியில் சிறந்து விளங்கியபோதும் ஏழாம் வகுப்பு வரை மாத்திரமே அவரால் படிக்க முடிந்தது. பின்நாட்களில் அவர் பாடசாலை செல்வதற்கு மறுப்புத் தெரிவித்த நிலையில் குர்ஆனை மனனம் செய்வதில் கவனம் செலுத்தினார்.
எழுதுவதன் ஊடாகவே றவ்வான் அதிகமாக குர் ஆனை மனனம் செய்துள்ளார். சூரதுல் பகராவை ஒரு வருட காலத்திற்குள் மனனம் செய்து நிறைவு செய்ததுடன் அதனைப் பரீட்சிக்கும் சோதனையில் மொத்தப் புள்ளிகளையும் றவ்வான் தன்வசப்படுத்தினார். தொடர்ச்சியாக ஏழு வருடங்கள் குர்ஆனை மனனம் செய்துள்ள றவ்வான் கடந்த றமழான் பிறை 29 இல் மனனம் செய்து நிறைவு செய்துள்ளார்.
அங்கீகரிப்பட்ட குழுவொன்றினால் அவர் பரீட்சிக்கப்பட்டு அவர் குர்ஆனை மனனம் செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர்.- Vidivelli, எம்.ஏ.எம்.அஹ்ஸன்
May almighty Allah give her (and her family) good health peaceful life
ReplyDelete