Header Ads



ஜனாதிபதி முன்னெடுத்துவரும் நிகழ்ச்சி, திட்டங்களுக்கு மகா சங்கத்தினர் பாராட்டு


ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையை நோக்கமாகக் கொண்டு, சேதனப் பசளை பயன்பாட்டுக்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அஸ்கிரிய மகா நாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இரசாயனப் பசளை பயன்பாட்டின் காரணமாக, நாட்டின் பல பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிறுநீரக நோய் உள்ளிட்ட பல தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் ஏராளமானவையாகும். இரசாயன உர இறக்குமதிக்காக வருடாந்தம் 400 மில்லியன் டொலர்களுக்கும் அதிக தொகையை அரசாங்கம் செலவிடுகின்றது. வெளிநாட்டு நிறுவனங்களுக்கு செல்லும் அப் பணத்தை நாட்டின் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு, சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் முடியுமாக இருக்குமென்று ஜனாதிபதி, மகா சங்கத்தினரிடம் சுட்டிக் காட்டினார். 

இன்று (27) முற்பகல் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

2015ஆம் ஆண்டுக்கு முன்னர், அரச அதிகாரிகள் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு பின்நிற்காத காரணத்தினால், குறுகிய காலத்தில் நாட்டில் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருந்தது என ஜனாதிபதி குறிப்பிட்டார். எனினும் கடந்த அரசாங்க காலத்தில் அதிகாரிகள் போலியான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறைப்படுத்தப்படுதல் உள்ளிட்ட பல்வேறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் தற்போதைய அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது எதிர்காலத்தில் தண்டனை பெற வேண்டியிருக்குமோ என்ற அச்சத்தில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் அதிகாரிகள் தயங்குவதாகவும் குறிப்பிட்டார். எனவே நாட்டில் பெருமளவு வேலைத்திட்டங்கள் முடங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரியதாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கொவிட் நோய்த் தொற்று நிலைமைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்து, நாட்டை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு, அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வறக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரர் பாராட்டுத் தெரிவித்தார். 

கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்ச்சித்திட்டம் பற்றி ஜனாதிபதி அவர்கள், மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கினார். மகாநாயக்க தேரர்கள் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி அவர்களை ஆசீர்வதித்தனர். முதியங்கன ரஜமகா விகாராதிபதி கலாநிதி முருத்தெனியே தம்மரத்தன தேரரும் இங்கு பிரசன்னமாகி இருந்தார். 

அதன் பின்னர் அஸ்கிரிய கெடிகே ரஜமகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி தேரரை சந்தித்து நலன் விசாரித்தார். தேரர் அவர்களும் ஜனாதிபதி அவர்கள் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சித் திட்டங்களை பாராட்டி ஆசீர்வதித்தார். அஸ்கிரிய பீடத்தின் கலாநிதி கொடகம மங்கள தேரரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். ஜனாதிபதி அவர்கள் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரரை சந்தித்து உரையாடினார். 

அஸ்கிரிய பீடத்தின் பிரதிப் பதிவாளர் நாரம்பனாவே ஆனந்த தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், அரசாங்கத்தின் தற்போதைய நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து தேரர் அவர்களுக்கு விளக்கினார்.  அதன் பின்னர் கெட்டம்பே ராஜோபவனாராமயவுக்கு சென்ற ஜனாதிபதி அவர்களை விகாராதிபதி கெப்பெட்டியாகொட ஸ்ரீ விமல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஆசீர்வதித்தனர்.  தியவடன நிலமே, நிலங்க தேல, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோர் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.06.27

No comments

Powered by Blogger.