தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கு ஓடுங்கள் - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை
பிலிப்பைன்ஸில் கொவிட் தடுப்பூசி போட மறுப்பவர் களைக் கைது செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்த அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே, 'தடுப்பூசி வேண்டாம் என்பவர்கள், இந்தியாவுக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ செல்லுங்கள்' எனக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ளதாவது:
நாடு முழுவதும் கொவிட் தொற்று மோசமாகப் பரவி வருகிறது. கொவிட் பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். ஆனால் பலரும் தடுப்பூசி போட மறுக்கின்றனர். தடுப்பூசி போடாதவர்களைக் கைது செய்ய நேரிடும். கைது செய்து, தடுப்பூசி போடுவோம். ஏற்கெனவே பெருந்தொற்றுப் பேரிடரால் அவதியுற்றிருக்கும் எங்களுக்கு, தடுப்பூசி போட மாட்டேன் எனக் கூறுபவர்கள் மேலும் மேலும் சுமை கொடுக்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் இவ்வளவு எடுத்துரைத்த பிறகும், உங்களுக்கு தடுப்பூசி வேண்டாமென்றால், இந்த நாட்டை விட்டு வெளியேறி விடுங்கள். இந்தியாவுக்குச் செல்லுங்கள், அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றாலும் செல்லுங்கள், அமெரிக்காவுக்குக் கூட செல்லுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை, தடுப்பூசியிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் செல்லக்கூடிய நாடாக அவர் முன்மொழிந்திருப்பதும்; தடுப்பூசியை போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குப் பதிலாக அதிகாரத்தன்மையை நிலைநாட்ட நினைப்பதும் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
Post a Comment