கொரோனா கட்டுப்படுத்தப்படவில்லை - அலட்சியமாக செயற்பட்டால் தம் உயிரையும், குடும்பத்தினரின் உயிரையும் இழக்க நேரிடும்
நாடளாவிய ரீதியில் பயணத் தடை தளர்த்தப்பட்ட போதும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் முற்றாக கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நாட்டு மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
அலட்சியமாக செயற்பட்டால் தம் உயிரையும் தம் குடும்பத்தினரின் உயிரையும் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ள அவர், கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டால் விளைவுகளை நாம் அனைவருமே சந்திக்க நேரும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நாட்டு மக்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பாக மேல் மாகாண மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என்றும் முடிந்தவரை சுய பயணக் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் பொது இடங்களில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார். பொறுப்புடன் செயற்பட்டு தமது உயிரையும் தமது குடும்பத்தினரது உயிர்களையும் பாதுகாத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்காக வர்த்தக நிலையங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்குமாறும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பயணத் தடை அமுலில் இல்லாத இக்காலப்பகுதியில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்கள் மற்றும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கான சுகாதார வழிகாட்டலுக்கு அமைய செயல்படுவது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Post a Comment