Header Ads



கருத்துத் சுதந்திரத்தின் குரல்வளைகளை, நெரிக்க இடமளிக்க முடியாது - இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

போலிச் செய்திகளைப் பதிவிடுவோர் அல்லது பகிர்வோருக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனக் கூறிக்கொண்டு, பொதுமக்களுக்குள்ள, கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் குரல்வளைகளை பொலிஸார் நெரிக்க இடமளிக்க முடியாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளதோடு, இது தொடர்பில் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோமெனவும் தெரிவித்துள்ளது.

'கொரோனா  நடவடிக்கைகளைத் தடுக்கும், ஒற்றுமையின்மை, வெறுப்பு ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் போலிச் செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள் பகிரல்' எனும் தலைப்பிடப்பட்டு, அண்மையில் பொலிஸார் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தனர். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, போலிச் செய்திகளைப் பரப்புவோர் கைது செய்யப்படுவார்களெனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

அவதூறு, வன்முறை தூண்டல்களுடன் தொடர்பில், சட்டங்களை அமுல்ப்படுத்துவது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லை எனவும், பொதுமக்கள் தங்களது அபிப்பிராயங்கள், விமர்சனங்களை கண்ணியமாக வெளிப்படுத்தும்போது, அவர்களின் குரல்வளைகளை நெரிப்பதற்காக, அத்தகைய சட்டங்களை அதிகாரிகள் பயன்படுத்தாதிருப்பதை உறுதி செய்வது, முக்கியமான ஒன்றெனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள பேச்சு, கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தின் குரல்வளைகளை நெரிப்பதற்காக பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களை, சில பொலிஸ் அதிகாரிகள், துஷ்பிரயோகப்படுத்தலாமெனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

மேலும்,நாட்டு மக்களின் பேச்சு சுதந்திரம், கருத்துகளை வெளிப்படுத்தும் சுதந்திரம், அபிப்பிராயங்களை மறுப்பதற்கான சுதந்திரம் ஆகிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

போலி செய்திகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை முழுமையாக விசாரிப்பதற்கு முன்னரே, 'போலி செய்தி' எனப்படும் குற்றத்துக்காக எந்தவொரு நபரும் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

பொலிஸாரால் வெளியிடப்பட்ட இச்சுற்று நிரூபம் தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், இது தொடர்பில் தேவைப்படும் பட்சத்தில் மேலதிக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோமெனவும் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.