Header Ads



இங்கிலாந்தில் வைரலாகும் ஒரு, முஸ்லிம் பெண்ணுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் (படங்கள்)


- Aashiq Ahamed -

கடந்த சில நாட்களில், பிரிட்டன் சமூக வலைத்தள வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட செய்திகளில் ஒன்றாக பின்வரும் சம்பவம் இருப்பதாக குறிப்பிடுகிறது இங்கிலாந்தின் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கையான மெட்ரோ. 

"நள்ளிரவுகளில் என் தந்தையிடம் இருந்து குறுந்தகவல்கள் வரும். சிரியா, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்று பார்த்தாயா என அதில் கேட்டிருப்பார். முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வும் அவரிடம் அதிகரித்திருந்தது" என்று கூறும் 28 வயதான பைத் அபே, ஒன்பது வருடங்களுக்கு முன்பு இஸ்லாமை தழுவியவர்.

தற்போது அமீரா என அறியப்படும் அபே-வின் மனமாற்றத்தை அவருடைய தாய் ஏற்றுக்கொண்டாலும் தந்தை தீவிரமாக எதிர்த்தார். நாளடைவில் இங்கிலாந்தின் தீவிர வலதுசாரி அமைப்பான EDL-லில் (English Defense League) இணைந்தார் அமீராவின் தந்தை. இஸ்லாம் மீதான வெறுப்புணர்வு பொறுக்க முடியாத நிலைக்கு செல்ல, தான் மிகுந்த அன்பு வைத்திருந்த தந்தையை விட்டு விலகினார் சகோதரி அமீரா.

கடந்த ஐந்து வருடங்களாக எவ்விதமான தொடர்பும் இல்லை. தன் தந்தையுடன் அமீரா பேச முயற்சித்த தருணங்கள் தோல்வியிலேயே முடிந்தன. சில வாரங்களுக்கு முன்பாக தந்தையிடம் இருந்து இமெயில். அமீராவை சந்திக்க விரும்புவதாக அதில் தெரிவித்திருந்தார். சந்திப்பின் போது தன் தந்தையிடம் மிகப்பெரிய மாற்றத்தை கண்டார் அமீரா.

இத்தனை வருடங்களாக தான் கேட்டு வந்த பிரார்த்தனைக்கு பலன் கிடைத்தது. இஸ்லாம் குறித்து தனக்கு போதிக்கப்பட்டவை தவறு என்பதை உணர்ந்துக்கொண்டதாகவும், தன் கடின காலங்களில் முஸ்லிம்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததாகவும், EDL அமைப்பில் இருந்து விலகி விட்டதாகவும் தந்தை தெரிவிக்க அமீரா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தன் வாழ்நாளின் சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று என வர்ணித்திருக்கிறார் சகோதரி அமீரா.

இந்த நெகிழ்ச்சியான ஒன்றுகூடல் நிகழ்வு குறித்து அமீரா சமூக வலைத்தளங்களில் பதிய, செய்தி வைரலானது. வாழ்த்துக்கள் குவிந்தன. இறைவன், அமீராவிற்கு மூன்று பெண் குழந்தைகளை கொடுத்து அருள் செய்திருக்கிறான். இதில் மூத்தவர், தன் ஏழு வயதில் குர்ஆனை மனனம் செய்தவராவார். அமீராவின் சகோதரர் மற்றும் அவருடைய மனைவியும் இஸ்லாமை தழுவியிருக்கின்றனர்.

படம் 1: ஒன்றுகூடலின் போது தன் தந்தையுடன் அமீரா எடுத்துக்கொண்ட படம். இருவரின் முகத்தையும் அமீரா மறைத்திருக்கிறார்.

படம் 2: தன் சகோதரர், அவருடைய மனைவி மற்றும் பாட்டியுடன் அமீரா (இடது ஓரம் முகத்திரை அணிந்திருப்பவர்).

செய்திக்கான ஆதாரங்கள்:

1. Metro. பார்க்க இங்கே https://bit.ly/3y1xZg4

2. சகோ.அமீராவின் இன்ஸ்டாக்ராம் பக்கம். பார்க்க இங்கே https://bit.ly/3x6YS1W



No comments

Powered by Blogger.