Header Ads



பெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்துவிட்டு, கொரோனா என்று கூறிய தம்பதி


பெற்றோரை பட்டினிபோட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் ஒரு தம்பதியை போலீஸார் கைதுசெய்துள்ளனர். விசாரணையின் போது அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தெலுங்கானா மாநிலத்தின் சூர்யாபேட்டை மாவட்டத்தின் மோட் மண்டலத்தின் தும்மகுடமில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இளம் தம்பதி, பெற்றோரை கொலை செய்து ,அது கொரோனாவால் ஏற்பட்ட மரணம் என்று காட்ட சதித்திட்டம் தீட்டியதாக, காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கோர நிகழ்வு தொடர்பான முழு விவரங்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.

தும்மகுடத்தை சேர்ந்த தம்பதி - ராமச்சந்திர ரெட்டி மற்றும் அனுசூயம்மாவுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருந்தனர்.

ராமச்சந்திர ரெட்டி கடுமையாக உழைத்து நிறைய சொத்து சேர்த்தார். 40 ஏக்கர் நிலமும் அதில் அடங்கும். அவருக்கு வயதாகிவிட்டதால், தனது சொத்தை இரு மகன்களுக்கும் சமமாக பிரித்துக்கொடுத்தார். வயதான காலத்தில் பெற்றோரை கவனிக்க வேண்டிய மகன்கள் அவர்களை, ஒரு மாதம் ஒருவரிடமும், அடுத்த மாதம் மற்றவரிடமும் வைத்து கவனித்துக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை தங்களுக்குள் செய்துகொண்டனர். இளைய மகன் இறந்ததால், மருமகள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

ராமச்சந்திர ரெட்டிக்கு 90 வயது மற்றும் அனுசூயம்மாவுக்கு 80 வயது. பெற்றோரை கவனிக்கும் முறை தங்களுக்கு வந்ததும் மூத்த மகன் நாகேஸ்வர ரெட்டியும், அவரது மனைவி லட்சுமியும், வயதான பெற்றோரை ஒரு சுமையாக கருதினார்கள். எனவே, அவர்களை வீட்டில் தங்க வைப்பதற்கு பதிலாக, அருகிலுள்ள ஒரு கொட்டகையில் வைத்திருந்தார்கள். இது பிளாஸ்டிக் ஷீட்களால் மூடப்பட்டிருந்ததால், வயதான தம்பதி அதிக வெப்பத்தால் மிகவும் சிரமப்பட்டார்கள். ஆனால் இது குறித்து மகனும் அவரது மனைவியும் கவலையேபடவில்லை என்று உள்ளூர்வாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

இதில் திருப்தி அடையாத இளம் தம்பதி, பெற்றோரை பட்டினி போட திட்டமிட்டதாக முனகலா சர்கிள் இன்ஸ்பெக்டர். அஞ்சநேயலு தெரிவித்தார். மகனும், அவரது மனைவியும் வயதான தம்பதின் மரணத்திற்கு தாங்கள்தான் காரணம் என்று ஒப்புக்கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்கள் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நாகேஸ்வர ரெட்டியும், அவரது மனைவி லட்சுமியும் பெற்றோரை முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர் என்பதும் தங்கள் கடமைகளைச்செய்ய தவறினர் என்பதும் தெளிவாகியுள்ளது.

இறுதியாக உணவு மற்றும் தண்ணீர் கூட இல்லாமல் வயதான தம்பதி பட்டினியால் இறந்ததற்கு இவர்களே காரணம். பெற்றோர் இறந்ததும், அவர்கள் கொரோனா காரணமாகவே காலமாவிட்டனர் என்றும் அவர்களை அடக்கம் செய்துவிட்டதாகவும், இந்த தம்பதி எல்லோரிடமும் சொன்னார்கள். மே 27 ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து கிராமவாசிகள் சந்தேகம் அடைந்து கிராம காவல்துறை அதிகாரி மூலம் போலீசில் புகார் அளித்தனர்.

அதனுடன் மோட் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் 08/2011 பதிவு செய்யப்பட்டது. ஐபிசி பிரிவு 304 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, சிஐ தெரிவித்தார். புதைக்கப்பட்ட சடலங்கள் வெளியே எடுக்கப்பட்டு, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

வயதான பெற்றோர் சொத்தை கொடுத்திருந்த போதிலும் அவர்கள் கவனிக்கப்படவில்லை என்பது மிகவும் நியாயமற்றது.

"ராமச்சந்திர ரெட்டி தம்பதி, ஒரு லட்சியவாத வாழக்கையை வாழ்ந்தனர்." என்று தும்மகுடத்தில் வசிக்கும் பி.ரவீந்திரா கூறினார். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து சொத்துக்களை சேர்த்து, இரு மகன்களுக்கும் சமமாக பிரித்துக்கொடுத்தனர். அப்படியிருந்தும் அவர்களை கவனித்துகொள்ளாமல் இருந்ததில் எந்த நியாயமும் இல்லை," என்று அவர் மேலும் கூறினார்.

கிராமவாசிகளில் பெரும்பாலானோர் வயதான தம்பதிக்கு ஆதரவாக இருந்தனர். முதுமையில் பட்டினியால் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது அனைவருக்கும் வேதனை அளித்தது. அவர்கள் அப்படி கஷ்டப்படுவதை கிராமவாசிகளால் பார்க்க முடியவில்லை. "நாகேஸ்வர ரெட்டியை நாங்கள் கண்டித்தபோதும் அவர் கவலைப்படவில்லை. திடீரென்று, ஒரு நாள் வயதான தம்பதி இறந்துவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது, நாங்கள் சந்தேகப்பட்டோம். அதை நாங்கள் காவல்துறைக்கு தெரித்தோம். விசாரணையின் பின்னர், உண்மை தெரியவந்தது. மகனும், மருமகளும் எவ்வளவு இரக்கமின்றி செயல்பட்டு அவர்களைக் கொன்றார்கள் என்பது இதன்மூலம் தெரியவந்தது," என்று கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.