Header Ads



அரசுக்கு எதிராக செயற்பட வேண்டும் என ரணில் கூறினார், அவற்றை வெளியே சொல்ல முடியாது (வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்)


- Mano Ganesan Mp -

நேற்று (23, புதன்கிழமை) பாராளுமன்ற சபைக்குள் சென்ற போது, ஐதேக தலைவர் ரணில் மீண்டும் மன்றம் வந்திருந்தார். அவரது ஆசனம் #13. எனது ஆசனம் #12. 

ரணிலுக்கு இடதுபுறம் TNA சம்பந்தன். எனக்கு வலப்புறம் தம்பி திகா. இருவரும் நேற்று விடுமுறை. 

நான் சென்று அமர்ந்ததும் ரணிலிடம், நாகரீகமாக வாழ்த்து தெரிவித்தேன். நன்றி கூறிவிட்டு, “அரசுக்கு எதிராக காத்திரமாக செயற்பட வேண்டும்” என்று தொடர்ந்து சில விஷயங்களை என்னிடம் கூறினார். அவர் சொன்ன சில விடயங்களை வெளியே சொல்ல முடியாது.

அவருக்கு பக்கத்திலும், எனக்கு பக்கத்திலும் எவரும் இல்லை. என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். 

அவருடன் அன்று கூட இருந்து, “மனோவை வடகொழும்பில் இருந்து துடைத்து எறிவேன்” என்று சபதமிட்ட நபர்கள் இன்று அவர் பக்கத்தில் இல்லை. நான் அப்படியேதான் இருக்கிறேன். இன்று என் பக்கத்தில் ரணில் தனியாக வந்து அமர்கிறார். 

வந்த பாதையில் வந்த “பாத்திரங்களை” நினைத்துக்கொண்டேன். “நேற்று, இன்று, நாளை” காலவோட்டம் மனதிற்குள் சிரிப்பு மூட்டியது. “ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்”. 

எனக்கு எப்போதுமே தெரிந்த ஒரு உண்மை, மீண்டும் என் கண் முன்னே இன்று நிரூபணமாகியது. “யாரும் வரலாம். யாரும் போகலாம். நாம், நாமாக திடமாக இருக்கும் வரைதான், நமக்கு மரியாதை”. 

எல்லோரையும் போல், நானும் ஒருநாள் போவேன். ஆனால், இன்னும் கொஞ்ச நாள் மனோ இருந்திருக்க கூடாதா? என தோழர்கள் விரும்பும்போதே போய் விடுவேன்..!

No comments

Powered by Blogger.